Friday, 19 June 2015

வர்த்தகத்துக்கு நல்லது, கூட்டாட்சிக்கு?


உலகம் முழுவதுமே இப்போது அரசுகள் வரி விகிதத்தை உயர்த்தவோ, புதிய வரிகளை விதிக்கவோ அஞ்சுகின்றன.
இந்தியா முழுவதற்கும் ஒரே ‘சரக்கு, சேவை வரி’ (ஜி.எஸ்.டி.) என்ற சீர்திருத்தம் பற்றி 10 ஆண்டு களாகப் பேசிவருகிறோம். ஏற்கெனவே, இந்திய மாநிலங்களில் அமலாகிவரும் ‘மதிப்புக் கூட்டப்பட்ட வரி’(‘வாட்’) முறைதான் இது. ஆனால், இன்னமும் விரிவானது. ‘வாட்’ என்பது விற்பனை வரிக்குப் பதிலாக, சரக்குகள் மீது மட்டும் விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி-யோ சரக்கு, சேவை இரண்டின் மீதும் விதிக்கப்படுவது.
இப்போதுள்ள வரி நிர்வாகத்தில் சரக்குகள் மீது மட்டும் மாநிலங்கள் விற்பனை வரி விதிக்கின்றன, சேவைகள் மீது அல்ல. மத்திய அரசு உற்பத்திப் பொருட்கள் மீதும் சேவைகள் மீதும் வரி விதிக்கிறது, மொத்த வர்த்தகம், சில்லறை வர்த்தகம் மீது அல்ல. சரக்கு, சேவை வரியானது (ஜி.எஸ்.டி.) இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஒரே விதமான வரி விதிப்பை உறுதி செய்யும். எல்லா பகுதிகளிலும் எல்லா சரக்குகள், சேவைகள் மீதும் வரி விதிப்பை விரிவுபடுத்தும். மத்திய அரசும் மாநில அரசுகளும் சரக்குகள், சேவைகள் மீது வரிவிதிக்க அதிகாரம் வழங்குவதற்காகத்தான் அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது.
பாதிக்கப்படும் நிதி நிர்வாகம்
20 ஆண்டுகளுக்கு முன்னால் ‘மதிப்புக் கூட்டப்பட்ட வரி’க்கு (வாட்) ஆதரவாக என்ன வாதங்கள் முன்வைக்கப்பட்டனவோ அதே வாதங்கள்தான் சரக்கு, சேவை வரிக்கு ஆதரவாகவும் வைக்கப்படுகின்றன. சரக்கு, சேவை வரியானது எல்லாவிதமான மறைமுக வரிகளையும் தனக்குள்ளே அடக்கிவிடுகிறது. வரி நிர்வாகத்தை எளிமைப்படுத்துகிறது. வரி செலுத்தப்படுவதை உறுதி செய்கிறது. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய மூன்று கட்டங்களிலும் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் இடுபொருட்கள் மீது விதிக்கப்படும் வரியைக் கணக்கிட்டு, இறுதி நுகர்வோர் மட்டும் வரியைச் செலுத்த வேண்டியிருப்பதால் வரிச்சுமை கூடிக்கொண்டே போகாமல் தடுக்கப்படுகிறது. இதனால் உற்பத்திச் செலவு குறைகிறது. ஏற்றுமதிக்குப் போட்டி போட முடிகிறது. சரக்கு, சேவை வரி பொதுவாக அமல்படுத்தப்படுவதால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பே 2% உயர்ந்துவிடும் என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. இது சரியா என்று காலம்தான் சொல்ல வேண்டும். ஆனால், மாநிலங்களின் நிதி நிர்வாகமும் சுயாட்சித் தன்மையும் நிச்சயம் பாதிக்கப்படும்.
மாநிலங்களுக்கு இழப்பு?
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பொது சரக்கு, சேவை வரி மசோதா, அரசியல் சட்டத்தின் ‘122-வது திருத்த மசோதா 2014’ என்று அழைக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளுக்குப் பொதுவாக ஒரே சரக்கு, சேவை வரி இல்லை, இரண்டு விதமாக உள்ளது. மத்திய அரசு நிர்வகிக்கப்போவது மத்திய சரக்கு, சேவை வரி (சி.ஜி.எஸ்.டி.) என்றும் மாநிலங்களால் நிர்வகிக்கப்படப்போவது மாநில சரக்கு, சேவை வரி (எஸ்.ஜி.எஸ்.டி.) என்றும் அழைக்கப்படும். இதன் கண்காணிப்பு, நிர்வாகமும் இருவேறு நிலைகளில் இருக்கும். இந்த வரி விகிதத்தை ‘சரக்கு, சேவை வரி கவுன்சில்’ என்ற அமைப்பு நிர்ணயிக்கும். இதன் தலைவராக மத்திய நிதி அமைச்சர் இருப்பார். மாநிலங்களின் நிதி, வருவாய்த் துறை அமைச்சர்கள் இதன் உறுப்பினர்கள். இந்த கவுன்சில் வரி விகிதத்தை நிர்ணயித்த பிறகு, மாநிலங்கள் அதை கூட்டவோ குறைக்கவோ முடியாது. அதே வேளையில், இந்த வரி விகிதங்களை மாநிலங்களின் தேவைக்கேற்ப திருத்த வரி விகிதங்களில் ‘குறைந்தபட்சம் - அதிகபட்சம்’ என்ற அளவு நிர்ணயிக்கப்படும். இவ்விரு வரம்புக்குள் ஏதேனும் ஒரு விகிதத்தில் மாநிலங்களில் வசூலித்துக் கொள்ளலாம்.
சமூக பரிமாணம்
சரக்கு, சேவை வரியானது எல்லா சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதுடன் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். உற்பத்தி வரி என்பது உற்பத்தியாளர்கள் மீது விதிக்கப்படுவது. சரக்கு, சேவை வரியோ நுகர்வோரால் செலுத்தப்படுவது. சரக்கையோ சேவையையோ அளிப்பவர் ஏற்கெனவே செலுத்திய வரியைக் கழித்துக்கொண்டுதான் இந்த வரியைச் செலுத்துவார். இன்னொரு வகையில் சொல்வதென்றால் சரக்கு, சேவை வரி என்ற மறைமுக வரியானது எல்லா வகை நுகர்வுக்கும் ஒரே சீரான விகிதத்தை உறுதி செய்யும். இப்போது அமலில் இருக்கும் வெவ்வேறு வரி விகிதங்கள், சலுகைகள், விலக்குகள் போன்றவற்றுக்கு இடமே இருக்காது.
சரக்கு, சேவை வரி முறையைத் தேர்ந்தெடுத்த பல நாடுகள் அத்தியாவசியப் பண்டங்களை இந்த வரியிலிருந்து விலக்கிவைத்துள்ளன. சிலவகைப் பண்டங்கள் மீது மிகக் குறைவான பொது வரியையே விதித்துவருகின்றன. விலக்குகள் மிகக் குறைவாகவோ அல்லது அறவே இல்லாமலோ இருப்பதுதான் பொது சரக்கு, சேவை வரி முறைக்கு நல்லது.
எது லட்சிய வரி விகிதம்?
சரக்கு, சேவை வரி பொதுவென்றால் எத்தனை சதவீதமாக அது இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 13-வது நிதிக்குழுவுக்காக நியமித்த பணிக்குழுவானது அது 12% ஆக இருக்க வேண்டும். இதில் மாநிலங்களின் பொது சரக்கு, சேவை வரியாக 7%-ம், மத்திய அரசின் பொது சரக்கு சேவை வரியாக 5%-ம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. 2014-ல் மாநில அரசின் பிரதிநிதிகள் இது 27% ஆக இருக்க வேண்டும் என்று கோரினர். இவ்விரண்டுமே சரியில்லை. 12% தான் வரி என்றால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு நிச்சயம். மதிப்புக் கூட்டப்பட்ட வரி விகிதம் 13% முதல் 14% ஆக இருக்கும்போது, 12% என்பது வருவாயைக் குறைத்துவிடும். 27% என்று விதித்தால் ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பெரும் சுமையாகிவிடும். இந்த அளவு 27%-க்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று ஜேட்லி உறுதியளித்திருக்கிறார்.
மறைமுக வரிக்கு முக்கியத்துவம்
உலகம் முழுவதுமே இப்போது அரசுகள் வரி விகிதத்தை உயர்த்தவோ, புதிய வரிகளை விதிக்கவோ அஞ்சுகின்றன. நேர்முக வரிகளைக் குறைத்துவிட்டு மறைமுக வரிகளை அதிகப்படுத்துகின்றன. வசதி படைத்த பணக்காரர்கள் அதிக பாரம் சுமக்க வேண்டும் என்ற காலம் மலையேறி, எல்லாச் சுமைகளையும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மீது சுமத்துவதே வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் மீதான வரியை உயர்த்தினால் அவை முதலீட்டை விலக்கிக்கொண்டு வேறு நாடுகளுக்குப் போய்விடும், அதனால் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அத்தனையும் குறைந்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
2013-ல் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி இந்திய அரசின் மொத்த வரி வருவாயில் நேர்முக வரிகள் மூலம் கிடைக்கும் பங்கு 37.7% தான். தென்னாப்பிரிக்காவில் இது 57.5% ஆகவும் இந்தோனேசியாவில் 55.85% ஆகவும் இருக்கிறது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தால் மறைமுக வரி விகிதம் இந்தியாவில் மேலும் அதிகரித்துவிடும்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: சாரி




16.6.2015
tamil hindu daily

Thursday, 11 June 2015

ஜிஎஸ்டி அமல்படுத்தினால் 30 சதவீதம் சரக்கு போக்குவரத்து கட்டணம் குறையும்: கிரைஸில் அறிக்கை


பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப் பட்டால் சரக்கு போக்குவரத் துக்கான செலவுகள் குறையும் என்று தரச் சான்று நிறுவனமான கிரைஸில் கூறியுள்ளது. சரக்கு போக்குவரத்துக்கான செலவுகளில் 30 சதவீதம் வரை மிச்சமாகும் என்றும், 3 - 4 வருடங்களில் சரக்கு கிடங்கு களுக்கான செலவுகளும் மிச்ச மாகும் என்றும் கூறியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் பட்சத்தில் கிடங்குகள் மற்றும் கொள்முதல் இருப்புக்கான செலவுகள் குறையும். இதனால் சரக்கு போக்குவரத்து செலவுகள் மிச்சமாகும்.
மாநிலங்களுக்கு இடையே யான சோதனைச் சாவடிகள் நீக்கப்படும் என்பதால் பொருட்கள் குறைந்த செலவில் விரைவாக சென்றடையும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
முக்கியமாக இதன் மூலம் நுகர்வோர் பொருட்கள் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பயனு டையதாக இருக்கும்.
உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் தங்களது விற்பனையில் 5 முதல் 8 சதவீத தொகையை சரக்கு போக்குவரத்துக்கு செலவிடு கின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தும் பட்சத்தில் அடுத்த மூன்று அல்லது நான்கு வருடங்களில் கிடங்கு செலவுகள் விற்பனையில் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை குறையும்.
சோதனைச் சாவடிகள் நீக்கப்படுவதால் ஏற்படும் தாமத செலவுகளில் 0.4 சதவீதம் முதல் 0.8 சதவீதம் சேமிக்கலாம். இதன் மூலம் மொத்த விற்பனையில் 1.5 சதவீதம் முதல் 2 சதவீத தொகையை மிச்சப்படுத்த முடியும் என்று கிரைஸில் ஆய்வு பிரிவின் முதன்மை இயக்குநர் பிரசாத் கோபர்கர் கூறினார்.
சரக்கு போக்குவரத்துக்கு ஆகும் மொத்த செலவுகளில் 20 சதவீதம் வரை நிறுவனங்களுக்கு சேமிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் நாட்டை ஒரே சந்தையாக ஜிஎஸ்டி மாற்றும். இது ஜிஎஸ்டியின் சாதகமான விஷயம் என்றும், நடுத்தர காலத்தில் இந்திய ஜிடிபி 2 சதவீதம் ஏற்றம் காண உதவும் என்றார். சரக்கு போக்குவரத்தில் 25 சதவீத நேரம் பல சோதனை சாவடிகள் மற்றும் நகர நுழைவு மையங்களில் வீணாகிறது. இதன் மூலம் செயல்பாட்டுக்கான செலவு அதிகரிப்பு மற்றும் கொள்முதல் பொருட்களை இருப்பு வைக்கும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன.
இந்த சட்டத்தை அமல்படுத்தும் பட்சத்தில் நுகர்வோர் பொருட்கள் துறை சரக்குகளை இருப்பு வைத்து விற்கும்போது சிஎஸ்டி கட்ட தேவையில்லை. இதன் மூலம் சுமார் 30 சதவீதம்வரை சரக்கு போக்குவரத்து செலவுகளில் பயனடையலாம்.
எப்எம்சிஜி மற்றும் மருந்து பொருட்கள் துறை 15 முதல் 20 சதவீதம் வரை பயனடையும். இந்த துறையில் இயல்பாகவே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்பதால் இவற்றுக்கான போக்குவரத்து செலவுகள் 15 - 20சதவீதம் வரை குறையும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 01 முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலை யில் கிரைஸில் ஆய்வு வெளி வந்துள்ளது.


nandri


http://tamil.thehindu.com/business/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7301463.ece

Monday, 8 June 2015

GST என்னும் பொருட்கள் சேவைகள் வரி - 4


மத்திய மாநில அரசுகளின் பொருட்கள் சேவைகள் வரிகள் பல இருக்க அவற்றை ஒன்றாக இணைத்து இந்த புதிய GST வரி ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் ஏற்படும் மாற்றங்களை பார்ப்போம்.
GST சட்டம்
மத்திய அரசின் கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, மாநில அரசின் விற்பனை வரி, நுழைவு வரி, பொருள் வாங்கும் வரி (சில மாநிலங்களில்), எல்லாம் நீக்கப்பட்டு, அவற்றிற்கு பதில் GST என்ற ஒரே வரி இருக்கும்.
இதனால், மாநிலங்கள் மேற்கூறிய வரிகளை விதிக்கும் சட்ட ரீதியான அதிகாரத்தை இழக்கும். மத்திய மாநில அரசுகள் இணைந்தே GST வரி அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். மாநிலங்களுக்கு இடையே நிலவும் வரி சீரின்மை வியாபாரத்தை எப்படி பாதிக்கிறது என்பதை முந்தைய வாரங்களில் பார்த்தோம். அதனை நீக்கும் பொருட்டு மாநிலங்கள் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
அதே நேரத்தில் மத்திய அரசு தன்னிச்சையான GST மாற்றங்களை செய்யக்கூடாது என்பதால், இச்சட்டம் GST கவுன்சில் என்ற அமைப்பு உருவாக்க வழி செய்கிறது. இதில் மத்திய, மாநில நிதி/வருவாய் அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருப்பார். இதில் நான்கில் மூன்று பங்கு வாக்குகளுடன் பெறப்பட்ட தீர்மானங்களே சட்ட மாற்றத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
GST வரி விகிதத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களுக்கும் இந்த GST கவுன்சிலின் ஒப்புதல் பெறவேண்டும். GST சட்டத்தை ஓர் அரசியல் சட்ட மாற்றத்தின் மூலம்தான் ஏற்படுத்த முடியும். எனவே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, பிறகு குறைந்தபட்சம் 50% மாநில சட்டபேரவையில் நிறை வேற்றபட்டால் மட்டுமே இச்சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிப்பார்.
சிறு வியாபாரிகள் இந்த சிக்கலான GST வரிக்கு உட்படுத்தக்கூடாது என்பதால், ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் தங்கள் வருட வியாபார மதிப்பில் 0.5% மட்டுமே GST செலுத்தினால் போதும். ஆனால் இவர்களுக்கு உள்ளீட்டு பொருள் வரிக் கழிவு கிடையாது.
GST வரி விகிதம்
GST என்பது VAT வகை வரி. இதில் ஒரு வியாபாரி பொருள் வாங்கியபோது செலுத்திய வரியை, தான் பொருள் விற்று செலுத்தும் வரியிலிருந்து கழித்துக்கொள்ளலாம் என்ற முறை உண்டு, இதற்கு Input tax credit என்று பார்த்தோம். இதுவரை, மத்திய அரசுக்கு செலுத்திய கலால் வரிக்கு மாநில விற்பனை வரியில் கழிவு கொடுக்க முடியாது. இனி இந்த சிக்கல் இல்லை. ஏனெனில் இந்த இரண்டு வரிகளும் இணைந்ததுதான் GST என்று மாறுகிறது.
இந்தியா கூட்டாட்சி முறையில் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் இரண்டும் இந்த GST வரியை வசூலிக்கும். எனவே இதற்கு இரட்டை VAT (Dual VAT) என்ற பெயரும் உண்டு. GST வரியில் மத்திய மாநில பங்குகள் என்னவாக இருக்கும் என்பது இதனை செயல்படுத்துவதில் உள்ள முதல் சிக்கல். GST வரி விகிதத்தை நிர்ணயிக்க கீழே உள்ளவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
மத்திய மாநில அரசுகளுக்கு குறைந்தபட்சம் இப்போதுள்ள வரி வருவாயில் எவ்வித சரிவும் இல்லாமல், வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வரி வருவாய் உயர்வதற்கும் ஏதுவாக வரி விகிதம் உயர்வாக இருக்கவேண்டும். இதற்கு Revenue Neutral Rate என்று பெயர். இந்த RNR ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் போது, எவ்வாறு எல்ேலாருக்கும் ஏற்புடைய ஒரே ஒரு RNR கண்டுபிடிப்பது?
இப்போது சில முக்கிய பொருட்களின் மீதான மத்திய மாநில வரி விகிதங்களை கூட்டினால் 23% முதல் 30% இருக்கிறது. எனவே GST 27% வரை இருக்கலாம் என்று தெரிகிறது. இது மிக அதிகம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
GST யை செயல்படுத்துவதில் உள்ள இப்போதைய பிரச்சினைகள் தொழில் துறையில் முன்னேறிய மாநிலங்கள் இப்போது CST மூலமாக கணிசமான வரி வருவாயைப் பெறுகின்றன. GST செயல்படுத்தும் போது CSTயை விலக்கவேண்டும், இதனால் இந்த மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் நஷ்டத்தையும் கவனமாக ஆராய்ந்து, மத்திய அரசு அந்த நஷ்டத்தை ஈடு செய்யவேண்டும்.
இப்போதுள்ள GST சட்ட வரைவில் இந்த மாநிலங்கள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு CST 1% விதிக்கலாம் என்றும், அதன் பிறகு அதனையும் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் வரி விழுதொடர் நிலை (cascading effect) உருவாகும் என்பதால் இதனை அனுமதிக்கக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில் மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய நஷ்டஈடு குறையும், மாநிலங்களும் GSTயை ஏற்றுக்கொள்வதற்கு இது உதவும் என்று மத்திய அரசு நினைக்கிறது.
GST வரியிலிருந்து விளக்கு அளிக்கவேண்டிய பொருட்களின் பட்டியல் சிறிதாக இருந்தால், பல பொருட்கள் இப்போது புதிதாக வரி விதிப்புக்கு உட்படும், அந்த பொருட்களின் விலை உடனடியாக உயரும். அதே போல் இதுவரை குறைவான வரி விகிதத்திற்கு உள்ளான பொருட்கள் மீது GSTயின் அதிக வரி விகிதம் விதிக்கப்படும்போது, அவற்றின் விலைகளை உயர்த்தும். இது வரை சேவைகள் வரி 14% உள்ளது, சேவைகளும் GSTயின் 27% வரிக்கு உட்படும்போது, அவற்றின் விலைகளும் வெகுவாக உயரும்.
GST என்பது கணினிமயமாக்கப்பட்ட வரி நிர்வாகத்தில் தான் சரியாக செயல்படும். எனவே வியாபாரிகளும், வரி நிர்வாகமும் முழுவதும் கணினி மயமாக வேண்டும். மத்திய வரி நிர்வாகம் கணினிமயமாக்கப்பட்ட நிலையில், இன்னும் பல மாநிலங்களில் இந்த ஏற்பாடு முழுமை பெறவில்லை. இதனை உடனடியாக சரிசெய்யவேண்டும். வியாபாரிகளும் கணினிமயமாக்கப்பட்ட பில் (bill) முறைக்கு மாறவேண்டும்.
மாநிலங்களுக்கிடையே உள்ள வியாபாரத்தின் மீதான GST மத்திய அரசால் மட்டுமே வசூலிக்கப்படும். இது மாநில வரி நிர்வாகத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் நஷ்டத்தை ஈடு செய்வதில் சிக்கல்கள் உண்டு. நஷ்டத்தை எப்படி அளவிடுவது, எவ்வளவு காலம் வரை ஈடு செய்வது என்ற பல அம்சங்களில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. ஆனால் 5 வருடங்கள் வரை வருவாய் நஷ்டத்தை மத்திய அரசு ஈடு செய்யும் என்று GST சட்டவரைவு கூறுகிறது.
பெட்ரோலிய பொருட்கள் மீது GSTக்கு பதில் தற்போது உள்ள மாநில விற்பனை வரி தொடரவேண்டும் என்று மாநிலங்கள் கேட்கின்றன. மாநில விற்பனை வரியில் மூன்றில் ஒரு பங்கு பெட்ரோலிய பொருட்கள் மூலம் பெறப்படுகிறது. எனவே இதனை விட்டுத்தர மாநிலங்கள் தயங்குகின்றன. ஆனால் பெட்ரோல் எல்லா பொருட்களின் சேவைகளின் உற்பத்தியில் இருப்பதால் VAT தொடர்பிலிருந்து இதனை பிரிக்கக் கூடாது என்பது பொருளியல்/வரி சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான முடிவை GST கவுன்சில் எடுக்கவேண்டும்.
நுகர்வுக்காக பயன்படுத்தப்படும் மதுவகைகள் மீது GST விதிக்கப்படமாட்டாது. இதனை மது உற்பத்தியாளர்கள் எதிர்கின்றனர். மதுவும் GSTக்கு உட்படவேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை, ஆனால் அவ்வாறு செய்தால் பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்பது மாநில அரசுகளின் எண்ணம்.
பொருட்கள், பயணிகள் போக்குவரத்தின் மீது GST விதிப்பதில் சிக்கல் உண்டு. போக்குவரத்து ஆரம்பம் ஆகும் இடத்தில் இந்த வரி பெறபட்டாலும், அதனை போக்குவரத்து முடியும் இடத்திற்கு அனுப்பவேண்டுமா என்ற சிக்கல் உண்டு. ஏனென்றால், போக்குவரத்து முடியும் இடத்தில் தான் அந்த சேவையை பெற்றவர் இருக்கிறார்.
இந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்பட்சத்தில்தான் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடியும். 2016 ஏப்ரல் வரை காத்திருப்போம்.
- இராம.சீனுவாசன் 
seenu242@gmail.com



tamil hindu daily 
vaniga  veethi

8.6.2015

Monday, 1 June 2015

GST என்னும் பொருட்கள் சேவைகள் வரி - 3


ஒரு மாநிலத்துக்குள் நிகழும் விற்பனையின் மேல் அந்தந்த மாநில அரசே விற்பனை வரி விதிக்கலாம் என்ற அரசியல் சட்டப் பிரிவு மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரங்களில் முக்கியமான ஒன்று. இன்றும் மாநில அரசுகளின் மிக முக்கியமான அதிக வருமானம் தரக்கூடியது விற்பனை வரிதான். ஆனால் இந்த அதிகாரத்தை மாநிலங்கள் முறையாக பயன்படுத்தவில்லை என்பது தான் முக்கியக் குற்றச்சாட்டு.
விற்பனை வரி விகிதப் போட்டி
1970-ம் ஆண்டுக்கு பிறகு மாநிலங்கள் தனியார் முதலீட்டை ஈர்க்க ஆரம்பித்தன. உள்ளீடு பொருட்களுக்கு அருகிலோ அல்லது சந்தைக்கு அருகிலோ தங்கள் உற்பத்தி நிலையத்தை அமைக்க தனியார் முதலீட்டாளர்கள் முயற்சிப்பர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்கட்டமைப்பு வசதியும் இதற்கு முக்கியம். நல்ல சாலை வசதி, இட வசதி, தடையில்லா மின்சாரம், போதுமான உழைப்பாளர்கள் கிடைப்பது போன்ற பல அம்சங்களை கவனத்தில் கொண்டுதான் தொழில் முதலீடு நடைபெறவேண்டும்.
இவற்றை எல்லாம் ஓரளவிற்கு அளித்துவிட்டு, மாநிலங்கள் விற்பனை வரி சலுகையை காட்டி தனியார் முதலீட்டை இழுக்கத் துவங்கின. எங்கள் மாநிலத்தில் விற்பனை வரி விகிதம் குறைவு, முதல் 3 அல்லது 5 வருடங்களுக்கு விற்பனை வரி விலக்கு என்ற சலுகைகளை கொடுக்க ஆரம்பித்தன.
இதனால் வரி விகிதங்கள் மாநிலங்களிடையே ஏற்றத்தாழ்வுடன் இருந்தன. பரப்பளவில் மிக சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்கள் அருகில் உள்ள பெரிய மாநிலங்களின் வரி விகிதத்தைவிட குறைவாகவே தங்கள் விற்பனை வரி விகிதங்களை வைத்திருந்தன. சிறிய மாநிலங்களின் வியாபாரமும் விற்பனை வரியும் இதனால் உயர்ந்தன. இவ்வாறு தொடர்ச்சியான வரி விகிதப் போட்டி மாநிலங்களுக்கிடையே நடந்தன.
மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பல வியாபாரக் குழுக்களின் நெருக்குதலுக்கு ஏற்ப ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அவ்வப்போது பொருட்களின் வரி விகிதங்கள் மாற்றப்பட்டன. சில மாநிலங்களில் 300 வகையான விற்பனை வரிகள் இருந்தன.
மாநில விற்பனை வரி VAT வரியாக மாறியது
பொதுவாக வரி அமைப்பு நிலையாகவும், சீராகவும் இருக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் விற்பனை வரி அமைப்பு மாறுபடுவதும், பல வரி விகிதங்கள் இருப்பதும், வரி அமைப்பும், வரி விகிதமும் அவ்வப்போது மாறுவதும், தேசிய அளவில் வியாபாரத்தை சிக்க லாக்குகின்றன. விற்பனை வரியின் அமைப்பு எல்லா மாநிலங்களிலும் ஒன்று போல இருக்கவேண்டும் என்ற கொள் கையை எல்லா மாநிலங்களும் 1990 களில் ஒப்புக்கொண்டன. இதன் முதல் கட்டமாக வரி விகிதங்களை சீராக்க வேண்டும். 2000-த்தின் தொடக்கத்தில் மாநிலங்கள் ஒன்று கூடி Floor sales tax rates என்பதை ஒப்புக் கொண்டன. இதன் மூலம் 2, 4, 12, 16 என்ற நான்கு அடிப்படை வரி விகித தொகுப்புகளை ஒப்புக்கொண்டன.
ஒவ்வொரு தொகுப்பில் உள்ள பொருட்களுக்கு, அந்த தொகுப்பு வரி விகிதத்தை விட குறைவாக வரி விகிதத்தை கொடுக்க முடியாது. இதனால் மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு வரி விகிதத்தை குறைப்பதை தவிர்த்தன. இருந்தாலும், இந்த கட்டுப்பாட்டையும் சில மாநிலங்கள் மீறின. சமசீர் விற்பனை வரி முறை VAT என்ற மதிப்பு கூட்டல் வரி அமைப்பில்தான் சாத்தியம் என்பதையும் மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. மதிப்பு கூட்டல் வரியின் அமைப்பை கடந்த வாரம் பார்த்தோம். அதில் உள்ள முக்கியமான அம்சங்களில் ஒன்று, ஒரு வியாபாரி செலுத்திய வரியை, தான் வசூலிக்கும் வரியிலிருந்து கழித்து மீதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதாகும். இதற்கு Input Tax Credit என்று பெயர்.
பொதுவாக VAT வரி செயல்படுத்த 4 கட்டுப்பாடுகள் அவசியம்.
1. ஒன்று அல்லது இரண்டு வரி விகிதங்கள் மட்டுமே இருக்க வேண்டும். இவையும் நிலையாக இருக்க வேண்டும். எனவே மாநிலங்கள் பல வரி விகிதங்களை வைத்துக்கொள்வதை தவிர்த்து, எல்லா பொருட்களையும் இரண்டு தொகுப்புகளாக கொண்டு இரண்டு வரி விகிதங்கள் வைக்கவேண்டும். இது வரி வசூலிப்பதை எளிதாக்கும்.
2. முடிந்தவரை எல்லா பொருட்களும் வரி விதிப்புக்கு உட்படுத்தவேண்டும். வேளாண் பொருட்கள் போன்ற சில பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கலாம்.
3. மாநிலங்களுக்கு இடையே உள்ள விற்பனையின் மீது விதிக்கப்படும் CST முழுவதும் நீக்கப்படவேண்டும்.
4. எந்த ஒரு மாநிலமும் குறிப்பிட்ட பொருட்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கக்கூடாது.
இந்த கருத்துகளை முன்வைத்து, VAT விற்பனை வரியில் இரண்டு வரி விகிதங்கள் இருக்கும் - அத்தியாவசிய பொருட்களுக்கு 4% VAT, மற்ற நுகர் பொருட்களுக்கு 12.5% VAT; விவசாயப் பொருட்களுக்கு VAT இருந்து விலக்கு; தங்கம் வெள்ளி மீது 1% VAT; பெட்ரோல், மதுவகைகள் VAT அல்லாத விற்பனை வரி விதிக்கலாம் என்று மாநிலங்கள் ஒப்புக்கொண்டு 2005-06 முதல் VAT வரியை அமல்படுத்தின. CST என்ற மாநிலங்களுக்கிடையே உள்ள விற்பனை மீதான வரி 4% இருந்து 2%ஆக குறைத்தாலும், இதனால் அதிக வரி வருவாய் இழப்பை தமிழகம் போன்ற தொழில்மயமான மாநிலங்கள் சந்திக் கின்றன. மேலும் CST முழுவதும் நீக்கப்பட வேண்டும் என்பது VAT வரி அமைப்பின் முக்கிய அம்சம். இதனால் ஏற்படும் வரி இழப்பை மத்திய அரசு கொடுக்கவேண்டும் என்று மாநிலங்கள் கேட்கின்றன.
நுழைவு வரி, octrai போன்றவை
மாநிலங்களில் விற்பனை வரி, மோட்டார் வாகன வரி விகிதங்கள் மாறுபடுவதால், ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்துக்கு வரும் பொருட்கள், குறிப்பாக வாகனங்கள் மீது நுழைவு வரி விதித்தன. இதே போல் பல உள்ளாட்சி அமைப்புகள் octrai என்ற நுழைவு வரி விதித்தன. இவற்றை பல மாநிலங்கள் விலக்கிக் கொண்டாலும், சிலவற்றில் இருக்கின்றன. இவற்றையும் நீக்கினால் தான் VAT வரி சிறப்பாகச் செயல்படும்.
இவற்றால் முன்பைவிட இப்போது மாநில விற்பனை வரி சீராகியுள்ளது. இப்போது மாநில அரசின் VAT விற்பனை வரியையும், மத்திய அரசின் CENVAT வரியையும் இணைத்து GST என்ற புது வரி அமைப்பை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கின்றன.
- seenu242@gmail.com

tamil hindu daily
vaniga veethi
1.6.2015