சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை கீழே காணலாம்.
கேள்வி 1 - ஜி.எஸ்.டி. என்பது என்ன? இது எவ்வாறு செயல்படுகிறது?
பதில்: ஜி.எஸ்.டி. என்பது ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஒரே மாதிரியான மறைமுக வரியாகும். இது இந்தியாவை ஒரே பொதுவான சந்தையாக ஒருங்கிணைக்கிறது.
ஜி.எஸ்.டி. என்பது சரக்கு மற்றும் சேவைகளை வழங்குவதில், உற்பத்தி செய்வது முதல் நுகர்வோருக்கு சென்றடையும் வரை, ஒரே வரியை விதிப்பாகும்.
ஒவ்வொரு நிலையிலும் செலுத்தப்படும் வரியானது, மற்ற நிலைகளில் அதன் மதிப்பு கூடும்போது இணைகிறது. எனவே, ஒவ்வொரு நிலையிலும் மதிப்பு கூடும்போது மட்டும் ஜி.எஸ்.டி. செலுத்தினால் போதும். பொருட்கள் விநியோகத்தில் கடைசி முகவர் விதிக்கும் ஜி.எஸ்.டி. மட்டுமே, இறுதி நுகர்வோருக்கு சென்றடைகிறது. எனவே, முந்தைய நிலைகளில் வரி செலுத்த வேண்டியதில்லை.
கேள்வி 2 - ஜி.எஸ்.டி.-யின் பயன் என்ன?
பதில்: ஜி.எஸ்.டி.-யின் பயன்களை விரிவாக காணலாம்.
· வர்த்தகம் மற்றும் தொழில்துறையினருக்கு
- எளிதில் ஏற்றுக் கொள்ளக் கூடியது: இந்தியாவில் எளிதான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தகவல் தொழில்நுட்ப அமைப்பே, ஜி.எஸ்.டி.-க்கு அடிப்படையாகும். எனவே, வரி செலுத்துவோருக்கான அனைத்து சேவைகளும், அதாவது, பதிவுகள், கணக்குகள், பணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்தையும் வரி செலுத்துவோர் இணையதளம் மூலம் செய்ய முடியும். இதனால், எளிதாகவும், வெளிப்படையாகவும் ஏற்றுக் கொள்ள முடியும்.
- வரி விகிதங்கள் மற்றும் அமைப்புகள் ஒரே மாதிரியாக இருக்கும்: மறைமுக வரி விகிதங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவை நாடுதழுவிய அளவில் ஒரே மாதிரியாக இருப்பதை ஜி.எஸ்.டி. உறுதிப்படுத்தும். இதன்மூலம், உறுதித்தன்மையை அதிகரிப்பதுடன், தொழில் செய்வதை எளிதாக்கும். வேறு வழியில் சொல்வதென்றால், எந்த இடத்தில் தொழில் செய்தாலும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி இருக்கும்.
- தொடர் வரியை நீக்கும்: ஒட்டுமொத்த சங்கிலி பிணைப்பு மற்றும் அனைத்து மாநில எல்லைகளுக்கும் அடுத்தடுத்து வரியில்லாத அமைப்பு இருப்பதன் மூலம், அடுத்தடுத்து வரி விதிப்பது குறைகிறது. இது தொழில் செய்யும்போது ஏற்படும் மறைமுக செலவுகளைக் குறைக்கிறது.
- போட்டித்தன்மையை ஊக்குவிக்கிறது: தொழில் செய்யும்போது ஏற்படும் பரிமாற்றச் செலவு குறைவதால், வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் போட்டித்தன்மையை ஊக்குவிக்கும்.
- உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பயன்கள்: மத்திய மற்றும் மாநில வரிகளில் பெரும்பாலானவை ஜி.எஸ்.டி.-க்குள் இணைகிறது. சரக்கு மற்றும் சேவைகளில் உள்ளீடுகள் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த அளவில் அகற்றப்படுகிறது. மேலும், மத்திய விற்பனை வரி நீக்கப்படுகிறது. இதன்மூலம், உள்ளூர் அளவில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான செலவு குறைகிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் சரக்கு மற்றும் சேவைகள் இடையே போட்டித்தன்மையை அதிகரிக்கும். இந்திய ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும். நாடுதழுவிய அளவில் ஒரே மாதிரியான வரிவிதிப்பு மற்றும் வழிமுறைகளால், நிர்வாகச் செலவுகள் குறையும்.
· மத்திய, மாநில அரசுகளுக்கு
- நிர்வாகம் செய்வது எளிதானது, சுலபமானது: மத்திய மற்றும் மாநில அளவிலான பல்வேறுபட்ட மறைமுக வரிகளுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி. உள்ளது. வலிமையான தகவல் தொழில்நுட்ப வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன்மூலம், இதுவரை மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரிகளை நிர்வகிப்பதை விட ஜி.எஸ்.டி.-யை நிர்வகிப்பது எளிதானது மற்றும் சுலபமானது.
- குளறுபடிகளை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது: சிறப்பான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பால், சிறப்பான வரிமுறையாக ஜி.எஸ்.டி. விளங்கும். பொருட்கள் பரிமாற்றத்தின்போது, ஒரு இடத்தில் வரவுவைக்கப்படும் வரி, மற்ற பகுதிக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. ஜி.எஸ்.டி. அமைப்பில் உள்ள வழிமுறைகளால் வர்த்தகர்களால் கூடுதல் வரி விதிக்க முடியாது.
- உயர் வருவாய் கிடைக்கும்: வரிவசூலிப்பதற்காக அரசு செய்யும் செலவை ஜி.எஸ்.டி. குறைக்கும். இது அதிக வருவாய் கிடைக்கச் செய்கிறது.
· நுகர்வோருக்கு
- சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்புகளுக்கு ஒரே அளவான மற்றும் வெளிப்படையான வரிஅளவு: மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான மறைமுக வரிகளை விதிப்பதால், பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட வரி, கணக்கில் வைக்கப்படுவதில்லை. இதனால், பெரும்பாலான சரக்கு மற்றும் சேவைகளின் விலை மறைமுக வரிகளால் அதிகரிக்கிறது. தற்போது ஜி.எஸ்.டி. மூலம், உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை ஒரே வரி விதிக்கப்படுகிறது. இதனால், இறுதி நுகர்வோர் மட்டும் வெளிப்படையான முறையில் வரிசெலுத்தும் நிலை ஏற்படுகிறது.
- ஒட்டுமொத்த வரிச்சுமையிலிருந்து நிவாரணம்: திறன்வாய்ந்த வரி அமைப்பு, குளறுபடிகள் கட்டுப்பாடு ஆகியவற்றால் பெரும்பாலான பொருட்களின் ஒட்டுமொத்த வரிச்சுமை குறையும். இது நுகர்வோருக்கு பயனளிக்கும்.
கேள்வி 3. ஜி.எஸ்.டி.-யில் மத்திய, மாநில அரசுகளின் எந்தெந்த வரிகள் இணைக்கப்படுகிறது?
பதில்: மத்திய அளவில், கீழ்க்காணும் வரிகள் ஒன்றிணைக்கப்படும்:
அ. மத்திய கலால் வரி
ஆ. கூடுதல் கலால் வரி
இ. சேவை வரி
ஈ. கூடுதல் சுங்கத் தீர்வை
உ. சிறப்பு கூடுதல் சுங்கத் தீர்வை
மாநில அளவில், கீழ்க்காணும் வரிகள் ஒன்றிணைக்கப்படும்:
அ. மாநில மதிப்புக் கூட்டப்பட்ட வரி அல்லது விற்பனை வரி
ஆ. பொழுதுபோக்கு வரி (உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கப்படும் வரியைத் தவிர), மத்திய விற்பனை வரி (மத்திய அரசு விதித்து, மாநில அரசுகள் வசூலிப்பவை),
இ. நகர் சுங்க வரி மற்றும் நுழைவு வரி
ஈ. கொள்முதல் வரி
உ. ஆடம்பர வரி மற்றும்
ஊ. லாட்டரி, சூதாட்டங்களுக்கான வரி.
கேள்வி 4 - ஜி.எஸ்.டி.-யை அறிமுகப்படுத்த மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் என்னென்ன?
பதில்: 13 ஆண்டுகால பயணத்துக்குப் பிறகு, நாட்டில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுகிறது. மறைமுக வரிகள் குறித்த கெல்கர் குழுவின் அறிக்கையில் முதல்முறையாக இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் ஜி.எஸ்.டி.-யை அறிமுகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகளை கீழே காணலாம்...
1. 2003-ம் ஆண்டில் மறைமுக வரிகள் குறித்து ஆய்வுசெய்த கெல்கர் குழு, மதிப்புக் கூடுதல் வரி அடிப்படையில், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பு குறித்து பரிந்துரை செய்தது.
2. ஏப்ரல் 1, 2010 முதல் தேசிய அளவில் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.அறிமுகம் செய்யலாம் என்ற ஆலோசனை, 2006-07-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை உரையில் முதல்முறையாக தெரிவிக்கப்பட்டது.
3. அதுமுதல் மத்திய அரசு விதிக்கும் மறைமுக வரிகள் மட்டுமல்லாமல், மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரிகளிலும் சீர்திருத்தங்களைக் கொண்டுவரலாம் என்று வலியுறுத்தப்பட்டது. எனவே, ஜி.எஸ்.டி.-யை அமல்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்க மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட அதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டது.
4. மத்திய மற்றும் மாநில அரசுகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியை விதிப்பது குறித்த முதலாவது கருத்துருவை 2009-ம் ஆண்டு நவம்பரில் அதிகாரம் பெற்ற குழு வெளியிட்டது.
5. ஜி.எஸ்.டி. தொடர்பான பணிகளை மேலும் விரிவாக மேற்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய கூட்டுப் பணிக் குழு செப்டம்பர் 2009-ல் அமைக்கப்பட்டது.
6. ஜி.எஸ்.டி.-யை அறிமுகம் செய்யும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக அரசியல்சாசன (115-வது சட்டத் திருத்த) மசோதா, மக்களவையில் மார்ச் 2011-ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்காகவும், அறிக்கை அளிக்கவும் இந்த மசோதா அனுப்பிவைக்கப்பட்டது.
7. இதனிடையே, மாநில நிதியமைச்சர்களை உள்ளடக்கிய அதிகாரம் பெற்ற குழுவுடன் மத்திய நிதியமைச்சர் 2012-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், ஜி.எஸ்.டி.-யை வடிவமைப்பதற்கான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அதிகாரம் பெற்ற குழு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றனர்.
8. அரசியல்சாசன (115-வது) சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட விவகாரங்களுடன் ஜி.எஸ்.டி. அமைப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்திய இந்தக் குழு, தனது அறிக்கையை ஜனவரி 2013-ல் தாக்கல் செய்தது. மேலும், ஜனவரி 2013-ல் அதிகாரம் பெற்ற குழுவின் கூட்டம், புவனேஸ்வரில் நடைபெற்றது. வடிவமைப்புக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், அரசியல்சாசன சட்டத் திருத்த மசோதாவில் சில திருத்தங்களை செய்ய அதிகாரம் பெற்ற குழு பரிந்துரை செய்தது.
9. புவனேஸ்வரத்தில் நடைபெற்ற அதிகாரம் பெற்ற குழுவின் கூட்டத்தில், ஜி.எஸ்.டி. குறித்து விரிவாக விவாதித்து அறிக்கை அளிக்க அதிகாரிகளைக் கொண்ட மூன்று குழுக்களை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. அதாவது,
அ. பொருட்கள் விற்பனைக்கான விதிகள், வருவாய் சமநிலை விகிதங்களை முடிவுசெய்வதற்கான குழு.
ஆ. இரட்டைக் கட்டுப்பாடு, உயர்ந்தபட்ச அளவு மற்றும் விதிவிலக்குகளை பரிந்துரைக்க குழு
இ. இறக்குமதிக்கான ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. (ஐ.ஜி.எஸ்.டி) மற்றும் ஜி.எஸ்.டி.-க்கான குழு.
10. நாடாளுமன்ற நிலைக் குழு, தனது அறிக்கையை மக்களவையில் ஆகஸ்ட் 2013-ல் தாக்கல் செய்தது. அதிகாரம் பெற்ற குழு மற்றும் நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகள் குறித்து சட்டம் இயற்றும் துறையுடன் அமைச்சகம் ஆய்வுசெய்தது. அதிகாரம் பெற்ற குழு மற்றும் நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் பெரும்பாலான பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதனடிப்படையில், வரைவு சட்டத் திருத்த மசோதா மாற்றியமைக்கப்பட்டது.
11. மேற்கண்ட மாற்றங்களை உள்ளடக்கிய இறுதி வரைவு அரசியல்சாசன சட்டத் திருத்த மசோதா, அதிகாரம் பெற்ற குழுவின் பரிசீலனைக்காக செப்டம்பர் 2013-ல் அனுப்பிவைக்கப்பட்டது.
12. அதிகாரம் பெற்ற குழுவின் கூட்டம், ஷில்லாங்கில் நவம்பர் 2013-ல் நடைபெற்றது. இதில், மசோதா குறித்து மேலும் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டது. அதிகாரம் பெற்ற குழுவின் சில பரிந்துரைகள் வரைவு அரசியல்சாசன (115-வது சட்டத் திருத்த) மசோதாவில் இணைக்கப்பட்டன. திருத்தியமைக்கப்பட்ட வரைவை, அதிகாரம் பெற்ற குழுவின் பரிசீலனைக்காக மார்ச் 2014-ல் அனுப்பிவைத்தனர்.
13. 15-வது மக்களவை கலைக்கப்பட்டதால், ஜி.எஸ்.டி.-யை அறிமுகப்படுத்துவதற்காக மக்களவையில் மார்ச் 2011-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 115-வது அரசியல்சாசன (சட்டத் திருத்த) மசோதா 2011, காலாவதியானது.
14. புதிய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, வரைவு அரசியல்சாசன சட்டத் திருத்த மசோதா, அதிகாரம் பெற்ற குழுவுக்கு ஜூன் 2014-ல் அனுப்பிவைக்கப்பட்டது.
15. இந்த மசோதாவுக்கு அதிகாரம் பெற்ற குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்துவதற்காக அரசியல்சாசன சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்த 17.12.2014-ல் அமைச்சரவை அனுமதி அளித்தது. இந்த மசோதா, மக்களவையில் 19.12.2014-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 6.5.2015-ல் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையின் நிலைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நிலைக்குழு தனது அறிக்கையை 22.07.2015-ல் தாக்கல் செய்தது.
கேள்வி 5 - இந்தியாவில் ஜி.எஸ்.டி. எவ்வாறு நிர்வகிக்கப்படும்?
பதில்: இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை மனதில் கொண்டு, ஜி.எஸ்.டி. இரண்டு பாகங்களாக இருக்கும். அதாவது, மத்திய ஜி.எஸ்.டி. (சி.ஜி.எஸ்.டி.) மற்றும் மாநில ஜி.எஸ்.டி. (எஸ்.ஜி.எஸ்.டி.). மத்திய அரசும், மாநில அரசும் பொருட்கள் மீது ஒரே நேரத்தில் ஜி.எஸ்.டி.-யை விதிக்கும். ஒவ்வொரு சரக்கு மற்றும் சேவைகளை வழங்கும்போதும் வரி விதிக்கப்படும்.
மாநிலத்துக்குள் நடைபெறும் அனைத்துப் பரிமாற்றங்களுக்கும் மத்திய அரசு மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை (சி.ஜி.எஸ்.டி.) விதித்து வசூலிக்கும். இதேபோல, மாநில அரசுகள் மாநில சரக்கு மற்றும் சேவை வரியை (எஸ். ஜி.எஸ்.டி.) விதித்து வசூலிக்கும். ஒவ்வொரு நிலையிலும் மத்திய ஜி.எஸ்.டி.-யின் இன்புட் டேக்ஸ் கிரெடிட்களை, பொருட்களை விற்பனை செய்யும்போது மத்திய ஜி.எஸ்.டி.-களில் ஈடுசெய்ய முடியும். இதேபோல, மாநில ஜி.எஸ்.டி.-யில் உள்ள இன்புட்களை, விற்பனை செய்யும்போது மாநில ஜி.எஸ்.டி.-யுடன் ஈடுசெய்ய முடியும். ஆனால், மத்திய சரக்கு மற்றும் சேவை வரியுடன், மாநில சரக்கு மற்றும் சேவை வரியை ஈடுசெய்ய முடியாது.
கேள்வி 6 - ஒரு குறிப்பிட்ட சரக்கு மற்றும் சேவைகளுக்கு மத்திய ஜி.எஸ்.டி. (சி.ஜி.எஸ்.டி.) மற்றும் மாநில ஜிஎஸ்டி (எஸ்.ஜி.எஸ்.டி) மூலம் ஒரே நேரத்தில் எவ்வாறு வரிவிதிக்க முடியும்?
பதில்: விதிவிலக்கு அளிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவைகள், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வராத பொருட்கள், குறிப்பிட்ட வரம்பைவிட குறைவாக உள்ள பரிமாற்றங்களைத் தவிர, மற்ற சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஒவ்வொரு பரிமாற்றத்தின்போதும், ஒரே நேரத்தில் மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் மாநில ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். மேலும், இரண்டும் ஒரே விலை அல்லது மதிப்பிற்கு விதிக்கப்படும். மாநில மதிப்புக்கூடுதல் வரியைப் போல இது இருக்காது. மாநில மதிப்புக் கூடுதல் வரி என்பது, பொருட்களின் மதிப்புக்கு மத்திய கலால் வரியுடன் சேர்த்து விதிக்கப்படுகிறது.
மாநிலத்துக்குள் இரட்டை ஜி.எஸ்.டி. முறை பின்பற்றப்படும் விதத்தை விளக்கும் படம் 1-ஐ கீழே காணலாம்.
கேள்வி 7 – ஜி.எஸ்.டி. அமைப்பில் ஏற்கனவே செலுத்தப்பட்ட வரியை சரக்கு மற்றும் சேவைகளுக்கு இடையே பயன்படுத்திக் கொள்ள முடியுமா?
பதில்: ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ், ஏற்கனவே செலுத்தப்பட்ட வரியை, ஒன்றுடன் மாற்றி சரிசெய்துகொள்ள முடியும். இதேபோல, மாநில ஜிஎஸ்டி-யிலும் இதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.-யில் குறிப்பிட்டுள்ள மாநிலங்களுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்படும் சரக்கு மற்றும் சேவைகளைத் தவிர மற்ற பொருட்களுக்கு சி.ஜி.எஸ்.டி. மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி.-யில் பயன்படுத்த முடியாது.
கேள்வி 8 - மாநிலங்களுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்படும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. முறைப்படி, ஜிஎஸ்டி எவ்வாறு விதிக்கப்படுகிறது?
பதில்: மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றமாக இருந்தால், அரசியல்சாசனத்தின் பிரிவு 269ஏ(1)-ன் கீழ் மாநிலங்களுக்கு இடையே விநியோகிக்கப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியை (ஐஜிஎஸ்டி) விதித்து மத்திய அரசு வசூலிக்கும். ஐஜிஎஸ்டி என்பது தோராயமாக மத்திய ஜிஎஸ்டி மற்றும் மாநில ஜிஎஸ்டி ஆகியவை சேர்ந்த அளவில் இருக்கும். இன்புட் டேக்ஸ் கிரடிட்டை ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்துக்கு தடையில்லாமல் கொண்டு செல்வதை உறுதிப்படுத்துவதற்காகவே ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையாளர், அவர் விற்கும் பொருட்களுக்கு மத்திய அரசிடம் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி-யை செலுத்த வேண்டும். அதற்கு முன்னதாக, அந்தப் பொருளை வாங்குவதற்காக செலுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி, மத்திய ஜி.எஸ்.டி, மாநில ஜி.எஸ்.டி ஆகியவற்றை ஈடுசெய்துகொள்ளலாம். ஏற்றுமதி செய்யும் மாநிலம், மாநில ஜி.எஸ்.டி-யை ஐ.ஜி.எஸ்.டி-க்காக மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். இறக்குமதி செய்யும் முகவர், தனது சொந்த மாநிலத்தில் அவுட்புட் டேக்ஸ் லயபிலிட்டியை (மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் மாநில ஜி.எஸ்.டி. ஆகிய இரண்டும்) வழங்கும்போது, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.-யின் கிரடிட்டைப் பெறலாம். இறக்குமதி செய்யும் மாநிலத்துக்கு மாநில ஜி.எஸ்.டி.-யை செலுத்துவதற்காக ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.-யின் கிரடிட்டை மத்திய அரசு வழங்கும். ஜி.எஸ்.டி. என்பது இறுதியில் சென்றடைபவர்களுக்கான வரிவிதிப்பு என்பதால், இறுதிசெய்யப்பட்ட பொருட்களுக்கான அனைத்து மாநில ஜி.எஸ்.டி.-யும் அந்தப் பொருளை பயன்படுத்தும் மாநிலங்களுக்கே சென்றுசேரும்.
மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்றத்துக்கு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள படம்-2-ன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
படம் 2
கேள்வி 9: ஜி.எஸ்.டி.-யை செயல்படுத்துவதில் தகவல் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
பதில்: நாட்டில் ஜி.எஸ்.டி.-யை அமல்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து சரக்கு மற்றும் சேவை வரி இணையத்தில் (ஜி.எஸ்.டி.என்) பதிவுசெய்யும். இது ஆதாயம் பெறுவதற்காக அல்ல. மத்திய, மாநில அரசுகள், வரி செலுத்துவோர் மற்றும் இதில் தொடர்புடைய மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ளும் வகையிலான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் சேவையை வழங்குவதே சரக்கு மற்றும் சேவைகள் வரி இணையம் (ஜி.எஸ்.டி.என்) ஆகும். இதன் முக்கிய நோக்கம், சிறந்த மற்றும் ஒரே மாதிரியான அமைப்பை வரிசெலுத்துவோருக்கும், பகிர்ந்துகொள்ளக் கூடிய கட்டமைப்பு மற்றும் சேவைகளை மத்திய, மாநில அரசுகளுக்கும் வழங்குவதாகும்.
ஜி.எஸ்.டி.என் என்பது அதிநவீன ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புடன் செயல்படுகிறது. இதில், பொதுவான ஜி.எஸ்.டி. வலைதளம் மூலம் பதிவு, கணக்குகளை தாக்கல் செய்தல், அனைத்து வரி செலுத்துவோருக்கும் பணம் செலுத்துதல் ஆகியவற்றை செய்ய முடிகிறது. மேலும், பின்புல தகவல் தொழில்நுட்ப அமைப்பு மூலம், குறிப்பிட்ட மாநிலங்களுக்கு தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளை ஆய்வுசெய்வது, பதிவு, தணிக்கை, மதிப்பீடு, மேல்முறையீடு ஆகியவற்றை செய்ய முடிகிறது. ஜி.எஸ்.டி.-யை நிர்வகிப்பதற்காக அனைத்து மாநிலங்கள், கணக்கு தணிக்கை நிர்வாகங்கள், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளும் தங்களது தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குகின்றன.
கணக்குகளை நேரடியாக சென்று தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. அனைத்து வரிகளும் இணையதளம் மூலமே செலுத்த முடியும். சரியாக இல்லாத கணக்குகள் தானாக குறிப்பிடப்படும். எனவே, இந்த விவகாரத்தில் ஆட்களின் தலையீடு தேவைப்படாது. பெரும்பாலான கணக்குகள் சுயமாக மதிப்பிடப்படுபவையாக இருக்கும்.
கேள்வி 10 – ஜி.எஸ்.டி.-யின் கீழ் இறக்குமதிக்கு எவ்வாறு வரிவிதிக்கப்படும்?
பதில் – தற்போது இறக்குமதிக்கு விதிக்கப்படும் கூடுதல் கலால் வரி, சிறப்பு கூடுதல் வரி ஆகியவை ஜி.எஸ்.டி.-யில் இணைக்கப்படும். அரசியல்சாசனத்தின் பிரிவு 269ஏ (1)-ன் படி, இந்திய எல்லைக்குள் அனைத்து இறக்குமதிக்கும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். தற்போது பின்பற்றப்படுவது போன்று அல்லாமல், இறக்குமதி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தும் மாநிலங்கள், இறக்குமதிக்காக செலுத்தப்படும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.-யிலிருந்து தங்களது பங்கை பெற முடியும்.
கேள்வி 11 – அரசியல்சாசன (122-வது சட்டத் திருத்த) மசோதா, 2014-ன் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
பதில்: இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களைக் காணலாம்.
- சரக்கு மற்றும் சேவை வரியை கையாள்வதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் தனித்தனியாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய கலால் வரி, கூடுதல் கலால் வரிகள், சேவை வரி, கூடுதல் சுங்க வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி ஆகிய பல்வேறு மத்திய மறைமுக வரிகளில் இணைக்கப்படுகின்றன.
- மாநில மதிப்புக் கூடுதல் வரி/விற்பனை வரி, பொழுதுபோக்கு வரி (உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் வரிகளைத் தவிர), மத்திய விற்பனை வரி (மத்திய அரசு விதித்து, மாநிலங்கள் வசூல் செய்வது), நகர் சுங்க வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி, ஆடம்பர வரி, லாட்டரி, சூதாட்ட வரி ஆகியவை ஒன்றிணைக்கப்படுகிறது.
- அரசியல்சாசனத்தின் கீழ் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்ட சரக்கு என்ற அடிப்படையில் பின்பற்றப்படுகிறது.
- மாநிலங்களுக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்படும் சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது.
- மனித நுகர்வுக்கான மதுபானங்களைத் தவிர அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் தொடர்பான பொருட்களும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பின்னொரு நாளில் கொண்டுவரப்படலாம்.
- சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு, 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்டப்படும்.
- சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான விவகாரங்களை ஆய்வுசெய்வதற்காக சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் உருவாக்கப்படும். இந்த கவுன்சிலானது வரிவிகிதம், வரி, கூடுதல் வரிகள், எந்த வரிகளை இணைக்கலாம், வரிவிலக்கு பட்டியல், வரி வரம்பு ஆகியவை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைகளை வழங்கும்.
கேள்வி 12- ஜி.எஸ்.டி.-யின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள பதிவு வழிமுறைகளின் முக்கிய சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
பதில்: ஜி.எஸ்.டி.-யின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள பதிவு வழிமுறைகளின் முக்கிய சிறப்பு அம்சங்களைக் காணலாம்.
1. ஏற்கனவே உள்ள முகவர்கள்: ஏற்கனவே மதிப்பு கூடுதல் வரி
/மத்திய கலால் /சேவை வரி செலுத்துவோர், ஜி.எஸ்.டி.-யின் கீழ் புதிதாக பதிவுசெய்ய வேண்டியதில்லை.
2. புதிய முகவர்கள்: ஜி.எஸ்.டி.-யின் கீழ் பதிவுசெய்வதற்கு ஒரே விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் அளிக்கலாம்.
- பதிவு எண், நிரந்தர கணக்கு எண் (பான்) அடிப்படையிலானது. மத்திய, மாநில அரசுகளுக்கு பயன்படும்.
- அனைத்து வரி அதிகாரமட்டங்களுக்கும் ஒருங்கிணைந்த விண்ணப்பங்கள்.
- ஒவ்வொரு முகவருக்கும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.ஐ.என். ஐடி வழங்கப்படும்.
- மூன்று நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.
- சிக்கலான விவகாரங்களில் மட்டுமே பதிவுக்குப் பிறகு ஆய்வுசெய்யப்படும்.
கேள்வி 13- ஜி.எஸ்.டி.-யின் கீழ் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான வழிமுறைகளின் மிகப்பெரும் சிறப்பம்சங்கள் என்ன?
பதில்: ஜி.எஸ்.டி.-யின் கீழ், கணக்குகளை தாக்கல் செய்வதற்கான வழிமுறைகளின் மிகப்பெரும் சிறப்பம்சங்களைக் காணலாம்.
- பொதுவாக கணக்குகளை தாக்கல் செய்வதால் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பயன்படும்.
- ஜி.எஸ்.டி. வர்த்தக நடவடிக்கைகளில் கணக்குகளை தாக்கல் செய்ய 8 விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான சராசரி வரி செலுத்துவோர், கணக்குகளை தாக்கல் செய்ய 4 விண்ணப்பங்களை மட்டுமே பயன்படுத்துவர். அவை விற்பனைக்கான கணக்குகள், கொள்முதலுக்கான கணக்குகள், மாதாந்திர கணக்குகள் மற்றும் வருடாந்திர கணக்குகள் ஆகியவையாகும்.
- சிறியஅளவில் வரி செலுத்துவோர்: சிறிய அளவில் வரிசெலுத்துவோர், தொகுப்பு திட்டத்தின் கீழ், காலாண்டு அடிப்படையில் கணக்குகளை தாக்கல் செய்யலாம்.
- கணக்குகளை தாக்கல் செய்வது முற்றிலும் ஆன்லைனிலேயே செய்ய முடியும். அனைத்து வரிகளையும் ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும்.
கேள்வி 14- ஜி.எஸ்.டி. யின் கீழ் பணம் செலுத்தும் வழிமுறைகளின் மிகப்பெரும் சிறப்பு அம்சங்கள் என்ன?
பதில்: ஜி.எஸ்.டி. யின் கீழ் பணம் செலுத்தும் வழிமுறைகளின் மிகப்பெரும் சிறப்பம்சங்களை கீழே காணலாம்...
1. மின்னணு பணம் செலுத்தும் நடவடிக்கை – எந்த நிலையிலும் காகிதங்கள் தேவையில்லை.
2. சலானை உருவாக்குவதற்காக ஒரே நிலை நடவடிக்கை – ஜி.எஸ்.டி.என்.
3. பணம் செலுத்தும் முறை – பணத்தை இணையதள வங்கி சேவை, கடன் அட்டை/பற்று அட்டை, என்.இ.எஃப்.டி./ஆர்.டி.ஜி.எஸ். மற்றும் வங்கிகளில் காசோலை அல்லது ரொக்கம் மூலம்.
4. சிறப்பு அம்சங்களுடன் கூடிய பொதுவான சலான் விண்ணப்பம்.
5. ஒரே சலானை பயன்படுத்தி, ஒரே முறையில் பணம் செலுத்தும் வழிமுறை.
6. பொதுவான அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள்.
7. பொதுவான கணக்குப்பதிவு வழிமுறைகள்.
http://www.pibchennai.gov.in/karuvoolam/releases%202016/August2016/03082016/03082016re9.html