Saturday, 13 May 2017

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 5

கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மிக மிக முக்கியமானது. ஏனெனில் இந்திய தொழில் வளர்ச்சியை பாதிக்கும்/தீர்மானிக்கும் முடிவுகளை அன்று அவர்கள் எடுத்திருந்தார்கள். அது என்ன அவ்வளவு முக்கியமான முடிவுகள்? ஒண்ணொண்ணா பார்ப்போமா?

முதலாவதாக, ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்த 5 விதிகளை (Invoice Rules; Payment Rules; Refund Rules; Registration Rules; Return Rules) சிறு சிறு மாற்றங்களுடன் இறுதி செய்திருக்கிறார்கள்.

அடுத்ததாக மீதமுள்ள 4 விதிகளை (Input Tax Credit Rules; Transitional Provision Rules; Valuation of Supply Rules; Composition Scheme Rules) கொள்கை அளவில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த கவுன்சில் கூட்டம் நடக்கும் பொழுது,இந்த 4 விதிகளும் விரிவாக விவாதிக்கப்பட்டு, ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதி செய்யப்படும்.

மூன்றாவது முடிவு தான் மிக முக்கியமானது. அதாவது அடுத்த கூட்டம் மே மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் ஸ்ரீநகரில் நடக்கும் என்பது. அதில் என்ன அவ்வளவு முக்கியத்துவம் என்கிறீர்களா?

பிரதமர் மோடியும் அவரது கட்சியினரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டியை அமல்ப்படுத்தியே ஆகவேண்டும் என முழங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் கவுன்சிலோ ஏப்ரல் மாதத்தில் கூடுவதாக இல்லை.அடுத்த கூட்டம் மே 18,19 தான். அதில் விவாதிக்கப்படும் திருத்தங்கள் இறுதி செய்யப்பட்டு அனேகமாக மே 25க்குள் பாராளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படும் என நினைக்கிறேன். அது விவாதிக்கப்பட்டு வெற்றிபெற அனேகமாக மே 30ஆகலாம்.

அதன் பின்னர் இறுதி செய்யப்பட்ட அந்த விதிகளின் அடிப்படையில் 32மாநிலங்களும் புதிதாக சட்டங்கள் இயற்றி தங்கள் சட்டசபைகளில் சட்டத்தை தாக்கல் செய்து வெற்றி பெறச்செய்து, குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றால் தான் சட்டம் முழுமை பெறும். இது முடிய எப்படியும் ஜூன் 25ஆகலாம்.

இப்படி இருக்க ஜூலை 1 ல் அமல்ப்படுத்துவது என்பது நடக்காத காரியம்.அரசுக்கே அப்படி ஒரு எண்ணம் இல்லை. இருந்திருந்தால் ஏப்ரல் மாதம் முழுக்க சும்மா இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

தொழில் வர்த்தக நிறுவனங்களை பொறுத்தவரை, இப்போதைக்கு குருடர்கள் தடவிப்பார்த்த யானை போல தான் இருக்கிறது ஜி.எஸ்.டி. முழுமையாக எந்த விவரமும் இறுதி செய்யப்படவில்லை. அப்படி ஏதேனும் இறுதி என சொல்லப்பட்டு அதன் அடிப்படையில் தங்கள் வியாபாரத்தை கணக்கிட்டு ஒரு முடிவுக்கு வரும் முன்னர் அந்த ‘இறுதி’ செய்யப்பட்ட சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து மீண்டும் குழப்பி விடுகிறார்கள்.

சரி, அரசு பல வகையான பிரச்சனைகளையும் விரிவாக ஆராய்ந்து வருவதால் பல பல திருத்தங்களை தேவைக்கு ஏற்ப செய்துகொண்டே வருகிறது. அதில் தவறு இல்லை. இதில் தொழில் நிறுவனங்களுக்கு என்ன பிரச்சனை?

தொழில் நிறுவனங்களுக்கு இப்போதைக்கு ஜி.எஸ்.டி தங்கள் தொழிலை எப்படி பாதிக்கும் என்பதே புரியவில்லை. எல்லா சட்டங்களும் இறுதி செய்யப்பட்டால் தான் ஒரு தெளிவான பிக்சர் கிடைக்கும். அதன் பின் அது தங்கள் தொழிலுக்கு சாதகமா பாதகமா என ஆராய்ந்து அதற்கு தகுந்த படி தங்களின் வியாபார திட்டங்களை வகுக்க வேண்டும்.

இது தவிர, தங்களின் கணக்குகளை இரு வகையாக பிரிக்கவேண்டும்.ஜி.எஸ்.டிக்கு முன், ஜி.எஸ்.டிக்கு பின். இரு வகையாக பிரித்தால் தான் தெளிவான வரி தாக்கல் செய்யமுடியும். ஏதேனும் சிறு பிழை இருந்தாலும் ஜி.எஸ்.டி சட்டப்படி ‘கைது’ நடவடிக்கையே எடுக்க முடியும்.

எனவே தொழில் நிறுவனங்கள், எல்லா சட்ட விதிகளையும் அறிந்து அதன் அடிப்படையில் தான் தங்களது கணக்கு வழக்குகளை நிர்வகிக்க முடியும்.அரசே ஜூன் மத்தியில் தான் எல்லாவற்றையும் இறுதி செய்யும் எனில்,அதன்பின் தங்களது கணக்கியல் மென்பொருளை (Billing/Accounting Software) மேம்படுத்தி அது தொடர்பாக தங்களது பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து முழுமையாக தயாராக எப்படியும் குறைந்தது மூன்று மாதங்களேனும் தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். எனவே செப்டம்பர் 1 ஆம் தேதி தான் அமலாக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அரசு ஏனோ ஜூலை 1 முதல் அமல்ப்படுத்த கட்டாயப்படுத்தி வருகிறது.

இப்போதைய வரி முறையில் இருந்து ஜி.எஸ்.டி வரிமுறைக்கு மாறுகையில் தற்போது கையிலிருக்கும் ஸ்டாக் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டி இருக்கும். ஜூலையா செப்டம்பரா என தெரியாத நிலையில் கொள்முதல் திட்டமிடுதலை கூட முறையாக செய்யமுடியாத அவல நிலைக்கு எல்லாவரையும் தள்ளி இருக்கிறது முன்னேற்பாடு இல்லாத இவ்வரசு.

இப்போது நாமே நமது வரியை தாக்கல் செய்ய முடியும். ஆனால் ஜி.எஸ்.டி முறையில் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வரி ஆளுனர்கள் (GSP - GST Service Providers) தான் நம் சார்பாக வரி செலுத்த வேண்டி வரும். அவர்களிடம் நாம் நமது கணக்கு விவரங்களை கொடுத்தால் போதும். மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இதற்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனித்தனி கட்டணம் இருக்கும். இந்த கூடுதல் செலவை சமாளிக்க தங்களிடம் இருக்கும் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கவேண்டிய நிலையில் தொழிற்சாலைகள் இருக்கின்றன. மேலும் அதிக பணியாளர்கள் ஜி.எஸ்.டிக்கு தேவை இல்லை. கணிப்பொறி மென்பொருள் (ERP) பக்காவாக இருந்தால் அதிலிருந்து ரிப்போர்ட் எடுத்து ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்யும் நிறுவனத்துக்கு கொடுக்க என ஒன்றிரண்டு பேர் இருந்தாலே போதும். எனவே வணிகவியல் பட்டதாரிகளின் வேலை இழப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இது தவிர சிறு குறு வியாபாரிகளின் நிலைமை தான் மிக மோசம்.ஜி.எஸ்.டியினால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்கள் தான். அதாவது,சாதாரண வியாபாரிகள் தங்கள் பொருட்களை வாங்கிய போது செலுத்திய வரியினை கழித்து (Set-Off) விற்பனை செய்வதால் விலை குறைவாக இருக்கும். ஆனால் ரூ 50 லட்சத்துக்கும் கீழ் டர்ன் ஓவர் இருக்கும் சிறு வியாபாரிகள் ‘கம்போசைட்’ முறையில் வரி செலுத்துவோர் என கொள்வதால்,அவர்களால் செலுத்திய வரியை கழித்துக்கொள்ளும் வசதி இல்லை. மேலும்1% வரி விதித்து விற்பனை செய்யவேண்டும். எனவே விலைவாசி அபரிமிதமாக ஏறும். அல்லது தொழிற் நிறுவனங்கள், சிறு குறு வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டி வரும். ஏனெனில் பெரும் வியாபாரிகளிடமிருந்து வாங்கும் பொருட்களை விட சிறு வியாபாரிகளிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு 18% கொள்முதல் வரியும் 1% விற்பனை வரியும் சேர்த்து அதிக விலை கொடுக்க வேண்டி வரும். மேலும் அப்படி விலை கொடுத்து வாங்கினாலும் அந்த வரியை கழித்துக்கொள்ளும் வசதி (ITC Set Off) இல்லாததால் யாரும் சிறு குறு வியாபாரிகளிடம் வாங்க மாட்டார்கள். இது நாளாவட்டத்தில் சிறு குறு வியாபாரிகளை முற்றிலுமாக ஒழித்து விடக்கூடும்.

இப்போது வெளி மாநில உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு வரிக்கழிவு வசதி இல்லாததால், அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேர் ஹவுஸ்/குடோன் வைத்து அதற்கு தங்கள் பொருட்களை ஸ்டாக் டிரான்ஸ்ஃபர் முறையில் வரியின்றி மாற்றி அங்கிருந்து உள்ளூர் வரி செலுத்தி விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் பல பல நிறுவனங்களின் வேர்ஹவுஸ் / குடோன்கள் மூலம் பல லட்சக்கணக்கான பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

ஜி.எஸ்.டி சட்டம் வெளிமாநில பொருட்களுக்கும் வரிக்கழிவு தருவதால் இனி இப்படியான வேர் ஹவுஸ் தேவை இல்லை. தொழிற்சாலைகளே நேரடியாக இந்தியா முழுதும் விற்றுக்கொள்ள முடியும். இதனால் ஏற்படக்கூடிய வேலை இழப்பு எவ்வளவு என்பதை கணக்கிட்டு பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.சிறு குறு தொழில் மற்றும் இது போன்ற துணை தொழில்களின் அழிவு ஆகியவை, அடுத்த இரண்டொரு வருடங்களில் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை இந்தியாவை பெரும் சிக்கலுக்குள்ளாக்கினாலும் ஆச்சர்யம் இல்லை.

தொழில் நிறுவனங்களுக்கு எளிமையான முறையாக இருக்கும் ஜி.எஸ்.டி சமூக பொருளாதார நோக்கில் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

உற்பத்தி மாநிலங்களுக்கு குறைந்த வரி வருவாயும் உபயோகிப்பாளர் மாநிலத்துக்கு அதிக வரி வருவாயும் கிடைப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி வரி முறை நம்மை போல வளர்ச்சியை நோக்கிய மாநிலங்களுக்கான பெருத்த தண்டனையாக வந்திருக்கிறது. அதை தான் மாண்புமிகு தமிழக முதல்வராக இருந்த புரட்சித்தலைவி ஜெயல்லிதா அவர்கள் தெளிவாக குறிப்பிட்டு ஜி.எஸ்.டி வரி விதிப்பை முழுமையாக எதிர்த்தார். மேலும் இந்தியா முழுதும் அமலானாலும் தமிழகம் அமல்ப்படுத்தாது என சொல்லியதற்கும் நியாயமான காரணங்கள் உள்ளன. அவர் மறைந்துவிட்ட நிலையில் இப்போதிருக்கும் அரசு ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ஆர்வத்தோடு அமல்ப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.

இவை பற்றியெல்லாம் அடுத்த பதிவில்.



http://satheeshchennai.blogspot.in/2017/04/gst-5.html

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 4

ஒரு வழியாக ஜி.எஸ்.டி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால் அதில் எனக்கு சில வருத்தங்கள் உள்ளன.

இந்தியா முழுமைக்குமான வரி சீர்திருத்தமான ஜி.எஸ்.டி மசோதாவை இரு அவைகளிலும் அறிமுகம் செய்து விவாதத்துக்கு உட்படுத்தி நிறைவேற்றுவதற்கு பதிலாக, பண மசோதாவாக (Money Bill) மக்களவையில் மட்டும் நிறைவேற்றி இருக்கிறார்கள். மாநிலங்களவையில் அது தோற்றாலும் பிரச்சனை இல்லை.

இதற்கான காரணங்கள் அரசியல் ரீதியானவை.



அதாவது பாஜகவுக்கு மக்களவையில் மட்டுமே பெரும்பான்மை இருக்கிறது. மாநிலங்கள் அவையில் இல்லை. பொதுவாக இதுபோன்ற அதி தீவிர முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் இயற்றப்படும்போது இரு அவைகளிலும் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுப்பது தான் இது வரையும் இருந்த வழக்கம். ஆனால் அத்தகைய மன முதிர்ச்சி இல்லாததாலோ என்னவோ அரசியல் வாக்குகள் எண்ணிக்கைகளை கருத்தில் கொண்டு மக்களவையில் மட்டும் நிறைவேற்றப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதன் பலனாக நாட்டு நலன் கருதியும் வர்த்தக வசதிக்காகவும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சில திருத்தங்களை, தனக்கிருந்த அபரிமிதமான பலத்தின் அடிப்படையில் பாஜக புறக்கணித்துவிட்டது. அதுமட்டும் அல்லாமல், AntiProfiteering rule போன்ற சில கொடுமையான விதிமுறைகளையும் புகுத்தி இந்த சட்டத்தை தன்னிச்சையாக நிறைவேற்றி இருக்கிறது.

போகட்டும். இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் இந்த புதிய ஜி.எஸ்.டி என்ன சொல்கிறது என பார்ப்போம்.

திருத்தப்பட்ட மாதிரி ஜி.எஸ்.டி சட்டத்தில் (Revised Model GST Law – RMGL)சொல்லப்பட்டிருந்த பல விஷயங்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட 4 சட்ட மசோதாக்களில் மீண்டும் மாற்றப்பட்டு இருக்கின்றன.

அதென்ன 4 சட்ட மசோதாக்கள்?

CGST – Central GST – Excise & Service Tax ஆகியவற்றுக்கு பதிலாக.
IGST – Integrated GST – CST க்கு பதிலாக.
UTGST – Union Territory GST – மத்திய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் வரம்புக்குள் விதிக்கப்படும் சட்டத்துக்காக.
Compensation Law – நிதி வருவாய் பகிர்மானம் தொடர்பாக.

இது தவிர மாநிலங்கள் அவரவர் மாநிலங்களுக்கு என்று தனித்தனியாக SGST –State GST – உருவாக்கவேண்டும்.

எனவே – நான்கு வகையான வரிவிதிப்பு முறைகள் (CGST, IGST, SGST, UTGST),அதில் ஐந்து வகையான வரி விகிதங்கள் (0%, 5%, 12%, 18%, 28%) என மிக மிக சிக்கலான ஒரு அமைப்பை கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே நாடு முழுமைக்குமான ஒரே வரிவிகிதம் என யாரேனும் (பிரதமரே ஆனாலும்) ஜல்லி அடித்தால் அப்படியா என வாயை பிளந்துகொண்டு நம்பிவிட வேண்டாம். மற்றுமொரு சந்தோஷ செய்தியாக சமீபத்திய சட்ட திருத்தத்தின் மூலம், உச்ச பட்ச வரி என்பது 28% லிருந்து 40% ஆக உயர்த்த (பாராளுமன்றத்தில் அனுமதி பெறாமலேயே உயர்த்த!) வழிவகை செய்யப்பட்டுள்ளது.  எனவே வரிவிகிதம் எக்கச்சக்கச்சக்கமாக ஏறும் என எதிர்பார்க்கலாம்.

GST யினால் விலைவாசி குறையும் என யாரேனும் சொன்னால் அதையும் அப்படியே நம்பிவிட வேண்டாம். இடை நிலை நிறுவனங்கள், வர்த்தக டீலர்கள் ஆகியோருக்கு (செலுத்திய வரியை செட் ஆஃப் செய்யும் வசதியின் காரணமாக) எளிமையாக இருந்தாலும் கடைநிலை உபயோகிப்பாளரின் நிலை மிக துயரமானதாக மாறும். இப்போது 5% வரி செலுத்தி வாங்கிக்கொண்டிருக்கும் பொருளுக்கு இனி 18% வரி செலுத்தி வாங்க வேண்டும். அந்த வரியை அவனால் எதிலும் கழித்துக்கொள்ள முடியாது.(இடை நிறுவனங்கள் தாங்கள் செலுத்திய வரியை, செலுத்த வேண்டிய வரியுடன் கழித்துக்கொள்ளலாம்)

மேலும் இடை நிறுவனங்கள் கூட, இரண்டு மாதம் வரையிலும் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு செலுத்தும் வரிக்கான Working Capital முடக்கி வைக்கவேண்டிய நிலையில் இப்போதைய 5% என்பது 18% என உயர்கையில் அந்த Working Capital தொகையின் அளவு கூடும். பின்னாளில் அந்த தொகை திரும்ப கிடைக்கும் என்றாலும் கூட தினசரி அடிப்படையில் பெரும் தொகையை முடக்கி வைக்க வேண்டும் என்பது பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஏனெனில் மும்மடங்காக அல்லவா உயர்த்தப்பட்டு இருக்கிறது?

வெளிமாநில கொள்முதலுக்கு இதுவரையும் வரி அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் வசதி இல்லாததால் பெரும் தொழிற்சாலைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேர் ஹவுஸ் / குடோன் அமைத்து அதற்கு தங்களின் பொருட்களை ஸ்டாக் டிரான்ஸ்ஃபர் முறையில் வரியின்றி அனுப்பி அங்கிருந்து உள்ளூர் விற்பனையாக அந்தந்த மாநிலங்களில் விற்று வந்தனர். இதன் மூலம் பல சிறிய டீலர்கள், சப்-டீலர்கள் தொழில் நடத்தி வந்தனர்.



இப்போது வெளிமாநில கொள்முதலுக்கு வரி அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் வசதி இருப்பதால், நேரடியாக தொழிற்சாலையிலிருந்தே விற்பனை செய்யலாம். வாங்குவோரும் அதை தான் விரும்புவார்கள். இதன் பிற பலாபலன்களாக டீலர், சப்டீலர் முறைகள் குறையும். அது வேலையின்மையை அதிகரிக்கும். நிறைய வேலையிழப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

சாலை வழியே எடுத்து செல்லப்படும் பொருட்களுக்கு பில் / இன்வாய்ஸ் அவசியம் இல்லை என இப்போதைய திருத்தப்பட்ட சட்டம் சொல்கிறது. அதாவது விற்பனையாளர், தனது பில்லை GSTN எனும் நெட்வர்க்கில் பதிவேற்றி அதற்கான Reference Number வாங்கினால் போதும். அதை வைத்து பொருட்களை எடுத்து செல்லலாம். வழியில் சோதனை செய்வோர் தங்களிடம் இருக்கும் கைகணினி மூலம் அந்த Number Verify செய்து வாகனத்தை அனுமதிப்பார்கள். சுலபமாக தெரிந்தாலும், இது மிகப்பெரிய அளவிலான வரி ஏய்ப்புக்கு வழி வகுக்கும். ஏனெனில், செக் போஸ்ட் எல்லாவற்றையும் நீக்க சொல்லி இருப்பதால் எல்லா வாகனங்களும் சோதனை செய்யப்பட மாட்டாது. Random அடிப்படையில் ஒரு சில வண்டிகள் மட்டுமே சோதிக்கப்படும். அதிலும் பில்லோ இன்வாய்ஸோ வேண்டும் என்பது கட்டாயமில்லை. இது வரி ஏய்ப்பு செய்வோருக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் செய்தி ஆகும்.

இந்த GSTN என்பது தனிக்கதை.  இது ஒரு அரசு & தனியார் பங்களிப்புடனான தனிப்பட்ட நிறுவனம். மத்திய அரசு 24.5%; மாநில அரசுகள் எல்லாவருமாக சேர்ந்து 24.5% தனியார் நிறுவனங்கள் பலவும் சேர்ந்து 51% பங்குகளை வைத்திருக்கின்றன. இவர்கள் தான் வரி வசூல்,நிதி நிர்வாகம், மாநிலங்களுக்கான நிதி பங்கீடு ஆகியவற்றை செய்யப்போகிறார்கள். இதில் தணிக்கை செய்யும் உரிமை கூட CAG க்கு கிடையாது. 

எனவே இந்த நிதி நிர்வாகத்தை எப்படி மேற்கொள்ள போகிறார்கள், யாரும் கேள்வி கேட்க உரிமையில்லாத நிலையில் அந்த தனியார் நிறுவனங்கள் எந்த அளவுக்கு நேர்மையாக பணத்தை கையாளும் (ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் என்பதை வைத்து கணக்கீட்டு கொள்ளுங்கள்) என்பதெல்லாம் கேள்வி குறியே. அதனால் தான் “தனியார் நிறுவனங்களை GSTN அமைப்பிலிருந்து நீக்கவேண்டும் இல்லாவிட்டால் வழக்கு போடுவேன்” என சுப்பிரமணியம் சுவாமி சொல்லி இருக்கிறார்.

இதில் மற்றொரு பிரச்சனை என்னவென்றால் இந்த GSTN தளத்தில் நமது வியாபார விஷயங்களை தாக்கல் செய்ய நமக்கு அதிகாரம் இல்லை. அதற்கென GSP இருக்கிறது. 20 GSPக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மூலமாக தான் இந்த GSTN தளத்தில் நமது வியாபார விபரங்களை பதிவேற்ற முடியும். அந்த வகையில் அந்த GSP நிறுவனங்களும்,அவர்களால் நியமிக்கப்படும் ASP நிறுவனங்களும் நல்லா சம்பாதிக்க முடியும். அதாவது நான் என்ன வியாபாரம் செய்தேன் என்பதை நானே இப்போது வரி தாக்கல் செய்துவிடுவது போலல்லாமல் இனி அவர்களிடம் கொடுத்து தான் தாக்கல் செய்யவேண்டும். அதற்கு தனியாக கட்டணம் உண்டு.

பெரும் நிறுவனங்கள் இதை செய்துவிடும். ஆனால் சிறு வணிகர்கள் நிலைமை?

முழுமையான ஏலக்டிரானிக் வரி நிர்வாகமான GST வழியாக நேர்மையாக வரி செலுத்தவேண்டும் என்கிற எண்ணமுடைய சிறு வணிகர்கள் அதற்காக கம்பியூட்டர், இண்டெர்னெட் வசதி, GST வசதியுள்ள ERP சிஸ்டம், அதை கவனிக்க ஒரு வணிகவியல் பட்டதாரி, வரி தாக்கல் செய்ய ஒரு ASP மற்றும் அதன் முழுமையான பரிவர்த்தனைக்கு என ஒரு GSP என பல விஷயங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கும். இது திடீரென்று ஏற்படும் ஒரு பெரும் நிதி சுமை. நாளாவட்டத்தில் சிறு வணிகர்கள் என்கிற ஒரு வகையினரே இல்லாமல் பெரு வணிகர்களும் கார்போரெட்டுக்களும் மட்டுமே கோலோச்சும் ஒரு காலகட்டம் வந்தால்  கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜாப் வர்க் விஷயங்களுக்காக அனுப்பப்படும் பொருட்கள் இப்போது 6 மாதங்களுக்குள் கொண்டு வரவில்லை என்றால் வரி செலுத்தவேண்டும் என்று இருப்பதை GST யில் ஒரு வருடம் என மாற்றி இருப்பது நல்ல விஷயம். ஆனால் ஒரு வருடத்துக்குள் கொண்டு வராவிட்டால் அது விற்பனை என கருதி அதற்கு வரிவிதிக்கப்படும் என்பது கொஞ்சம் சிக்கல் தான்.

SEZ எனப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு விற்கப்படும் பொருட்களுக்கான வரி விதிப்பை போல குழப்பமான விஷயம் பிரிதொன்றும் இல்லை. ZERO RATED என சொல்லப்பட்டாலும், முதலில் வரி செலுத்தி பின்னர் அதை திரும்பபெற வகை செய்து தான் சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. இது SEZ நிர்வாகத்தை நிலைகுலைக்கும். அதிகபட்சமான வரியை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தமும், (இத்தனைக்கும் SEZ க்கு வரிவிலக்கு இப்போது இருக்கிறது) அப்படி செலுத்திய வரியை திரும்ப பெற விண்ணப்பித்து அது கிடைக்கும் வரையுமான காலத்துக்கு Working Capitalமுடக்கமும் மிகப்பெரிய பாதிப்பை உற்பத்தி துறைக்கு உருவாக்கும்

தினசரி வியாபாரத்தை GSTN இல் பதிவேற்றவேண்டும், ஸ்டாக் விபரங்களைGSTN தளத்தில் தான் கண்காணிக்க வேண்டும் என்கிற விதிமுறைகள் சொல்லி இருந்தாலும், GSTN நமக்கு பார்வையிட அனுமதி இல்லை என்பதும் GSPமட்டுமே அதை செய்யமுடியும் என்பதும் மிக பெரிய சிக்கல். இனி ஒவ்வொரு விஷயத்துக்கும் நாம் GSP க்களை நம்பியே செயல்படவேண்டி இருக்கும். அவர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வேறு செலுத்த வேண்டி இருக்கும்.

GST தரும் மற்றுமொரு சிக்கல், நாம் பெறும் அட்வான்ஸ் தொகைக்கும் வரி செலுத்தவேண்டும் என்பது. அதாவது ஒரு வியாபாரம் ரூ.1,00,000 க்கான ஆர்டர் என வைத்துக்கொள்வோம். 20% அட்வான்ஸ் & பாக்கி விற்பனைக்கு பின் என நிபந்தனைகள் இருந்தால் முதலில் வாங்கும் ரூ.20,000 க்கு வரி செலுத்தவேண்டும். அதற்கு என GSTN கொடுக்கும் தனி Reference Numberஅடிப்படையில் தான் அதற்கான வியாபாரங்களை செய்ய வேண்டும். சொந்த முதலீடு குறைவாகவும் OPM எனப்படும் பிற முதலீடுகளை அதிகமாகவும் வைத்து செய்யப்படும் உற்பத்தி / வியாபார விஷயங்களில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பல பல விஷயங்கள் இது போல இருந்தாலும் மிக குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே இங்கே சொல்லி இருக்கிறேன். மற்றவை பின்னர்.


ஒரு தொழிற்சாலை, பெரும் நிறுவனம், கார்போரேட் என்கிற வகையில் இருந்து பார்த்தால் GST மிக அருமையான விஷயம். ஆனால் சிறு வணிகர்கள்,தரகு நிறுவனங்கள், குறு தொழில் உற்பத்தியாளர்கள் பார்வையில் GST என்பது பெரும் சுமை. நாம் நாட்டு நலன், வரி வருவாய், அரசு சார்ந்த நிறுவனங்களின் லாபம் என்று மட்டும் பார்க்காமல் மக்கள் நலன், சமூக பொருளாதார நிலைமை ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு சட்டம் கொண்டுவரவேண்டும் என்பதை யாராவது பாஜகவுக்கு புரியவைத்தால் நல்லது 



http://satheeshchennai.blogspot.in/2017/03/gst-4.html

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் – 3

என் முந்தைய பதிவுகளில் சொன்னது போல எல்லா சிக்கல்களையும் கடந்து ஜி.எஸ்.டி அமல் படுத்தப்படும்பொழுது எப்படி இருக்கும்?

ஜி.எஸ்.டி என்பது முதலில் ஒரு முனை வரியாக கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டு இப்போது மும்முனை வரியாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இப்போது இருக்கும் பல பல வரிகளை எல்லாம் ஒன்றிணைத்து ஒரே வரி விகிதம் ஆனால் மூன்று வகைகளில் விதிக்கப்படுகிறது.

உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு CGST (இப்போதிருக்கும் சென்டிரல் எக்ஸைஸ் போல) மாநிலங்களுக்குள்ளே நடக்கும் பரிமாற்றங்களுக்கு SGST(இப்போதிருக்கும் VAT போல) மாநிலங்களுக்கு இடையே நடக்கும் பரிமாற்றங்களுக்கு IGST (இப்போதிருக்கும் CST போல) கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் எல்லோரும் சிலாகிக்கின்ற அளவுக்கு என்ன பெரிய சீர் திருத்தம் இருக்க போகிறது? ஜஸ்ட் பெயர் மாற்றம் தானே செய்திருக்கிறார்கள் என பல பல பொருளாதார அதிகாரிகளே கூட என்னிடம் கேட்டதுண்டு. ஆனால் இது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. இது மிக பெரிய அளவிலான வரி சீர் திருத்தம் தான். அதுமட்டுமல்லாமல் அரசுக்கான வருவாய் வரும்படிக்கான அமுத சுரபியும் கூட. (ஒழுங்காக செயல்படுத்தப்பட்டால்)

இப்போது இருக்கும் முறைப்படி ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு வரி விகிதம் இருக்கிறது. அதாவது எக்ஸைஸ் 12.5%; வாட் (பொதுவாக) 5% & 14.5%; CST(பொதுவாக) 5% & 14.5%; CST (C Form அடிப்படையிலான வியாபாரங்களுக்கு) 2% என இருக்கிறது. இனிமேல் இவை எல்லாவற்றுக்கும் ஒரே வரி விகிதம். அதாவது காங்கிரஸ் கேட்டபடி 18% அல்லது ஜெட்லி சொல்வது போல 27%. எல்லா பரிமாற்றத்துக்கும் ஒரே வரி தான்.

எதற்காக 18% வரி என ஒரு கேள்வி வருதுல்ல? இப்போதிருக்கும் எக்ஸைஸ் 12.5% & வாட் 5% சேர்த்து வரும் 17.5% வரியை ரவுண்ட் ஆக்கி தான் 18% வரி நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் 12.5% + 14.5% சேர்த்து 27% வரை வரி விதிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

மேலோட்டமாக பார்க்கையில் வரி விகிதத்தை எக்கச்சக்கச்சக்கமாக ஏற்றி இருப்பது போல தோற்றம் அளித்து இந்தியாவை திவாலாக்க முனைவது போல தெரிந்தாலும், இது உண்மையில் அந்த அளவுக்கு பயப்படக்கூடிய வரி உயர்வு அல்ல. எப்படி?

இப்போதிருக்கும் எக்ஸைஸ் & வாட் வரியை இப்போது செட் ஆஃப் செய்து கொள்ளலாம். அதாவது பொருளை விற்றதற்காக செலுத்த வேண்டிய வரியில் அந்த பொருளை வாங்கும்போது செலுத்திய வரியை கழித்து விட்டு வெறும் லாபத்துக்கு உரிய வரியை மட்டும் கட்டினால் போதும். ஆனால் CST வரிக்கு அப்படியான செட் ஆஃப் வசதி இல்லை.



இனி புதிய GST விதிகளின் படி, CST க்கு இணையான CGST விற்பனைக்கான வரியையும் செட் ஆஃப் செய்துகொள்ள முடியும். ஆனாலும் விலை ஏற்றம் இருக்கும். வியாபாரிகள் தங்கள் புத்திசாலித்தனத்தை காட்ட முனைந்தால் அரசு திவாலாக வாய்ப்பு இருக்க தான் செய்கிறது. ஒரு சின்ன சாம்பிள் சொல்லட்டா?

நீங்கள் ஒரு வியாபாரி என வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பொருளை வேறொரு மாநிலத்தில் உற்பத்தி செய்பவரிடம் இருந்து வாங்கி இன்னொரு டீலருக்கு விற்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்:


இப்போதையCST முறை
புதிய IGSTமுறை-1
புதிய IGSTமுறை-2
பொருளின் விலை (வாங்கும்போது)
100.00
100.00
100.00
CST வரி விகிதம்
2%
18%
18%
வரி தொகை     (A)
2.00
18.00
18.00
நாம் கொடுக்கும் தொகை
102.00
118.00
118.00
நமது லாபம்    
10.00
10.00
10.00
பொருளை விலை (விற்கும்போது)
112.00
128.00
110.00
CST வரி விகிதம்          
2%
18%
18%
வரி தொகை   (B)    
2.24
23.04
19.08
விற்பனை விலை
114.24
151.04
129.08
அரசுக்கு செலுத்தவேண்டிய வரி
2.24
5.04
1.08

பொருளாதார நிபுணர்கள் புதிய முறை 1 இல் சொல்லியிருப்பது போல அரசுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும். அதே சமையம் பொருளின் விலை இப்போதிருக்கும் 114.24 இலிருந்து 151.04 ஆக உயரும். இது பொருளாதாரத்தை நசித்து விடும் என சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அரசோ வரி வருவாய் 2.24 க்கு பதிலாக 5.04 கிடைக்கும் என்கிறது (வரி B யில் ஏற்கனவே செலுத்திய வரி A வை கழித்து வரும் தொகை). அதனால் தான் இவ்வளவு மும்முரமாக இதில் இறங்கி இருக்கிறார்கள்.

ஆனால் இதில் இன்னொரு வாதம் இருக்கிறது. அதாவது புதிய முறை 2 இல் சொல்லியிருப்பது போல வியாபாரிகள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அரசுக்கு நஷ்டம் வரும். அதாவது வாங்கும்போது செலுத்திய வரி A எப்படியும் செட் ஆஃப் செய்துவிட முடியும் என்பதால் அதை கணக்கில் எடுக்காமல் விற்பனை விலையை குறைத்து விற்பனை செய்தால் 151.04 க்கு பதில் 129.08 க்கு பொருளை விற்பனை செய்ய முடியும். தன்னுடைய லாபம் 10.00 எந்த விட இழப்பும் இன்றி அப்படியே கிடைத்து விடும். அரசுக்கு சட்டப்படி செலுத்தக்கூடிய தொகையை செலுத்தியாக முடியும். அப்படியான நிலைப்பாட்டை வியாபாரிகள் எடுத்தால் வரி B யில் வரி A வை கழித்து பார்த்தால் 5.04 க்கு பதில் அரசுக்கு வெறும் 1.08 தான் வருவாயாக கிடைக்கும். அது இப்போது கிடைத்துக்கொண்டு இருக்கும் 2.24 ஐ விட குறைவு. இது தான் பல மாநிலங்களின் அச்சம். இந்த இழப்பை யார் ஈடு செய்வது என்கிற விவாதம் தான் இன்னமும் முடிவு தெரியாமல் நீண்டு கொண்டு இருக்கிறது.

இதில் இன்னொரு சுவாரசியம் இருக்கிறது. அதாவது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இப்படி செட் ஆஃப் செய்துகொள்ள முடியும். பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள், கடைசி நிலை உபயோகிப்பாளர்கள் (End users) ஆகியோர் இப்படி செட் ஆஃப் செய்து கொள்ள முடியாது. அவர்கள் மொத்த வரியையும் சேர்த்து கட்டவேண்டி இருக்கும். இது சில்லறை வர்த்தக பற்றாக்குறையை (Retail inflation) அதிகரித்து நாட்டை நாசமாக்கி விடும் என்பதும் சிலரது அச்சம்.

இது போன்ற வரி தொடர்பான சிக்கல்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் பல நல்ல விஷயங்களும் இருக்கிறது.

இப்போது போல வரி ஏய்ப்பு செய்ய முடியாது. காரணம் இப்போது கொள்முதல் விற்பனை இரண்டையும் ஒரே நபர் தான் அரசுக்கு தெரியப்படுத்துகிறார். எனவே அவர் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். கணக்கில் வராமல் கொண்டு வரப்படும் பொருட்களை கணக்கில் இல்லாமல் விற்றுவிட முடியும். அதை நியாயப்படுத்த ஜஸ்ட் டம்மி பில்களை வாங்கி அதை வைத்து கணக்கை தாக்கல் செய்ய முடியும். (சென்னையில் கூட இப்படி டம்மி பில்கள் தரும் ஏஜெண்டுகள் நிறைய பேர் இருக்கிறார்கள். பில் விலையில் 1% கமிஷன் தான் அவர்களுக்கு)  ஆனால் புதிய முறை அப்படி அல்ல. விற்பனை விபரத்தை மட்டும் தான் நாம் தெரிவிக்க முடியும். கொள்முதல் விபரத்தை நமக்கு பொருளை விற்றவர்கள் இணைய தளத்தில் பதிந்து இருப்பார்கள். அதில் நமது பில் இருந்தால் தான் அது பட்டியலாக்கும். அதே போல நாம் விற்பனை செய்த பொருளுக்கான பில்லை நாம் பட்டியல் இட விட்டுப்போனால் அதன் வரி பலனை பொருளை நம்மிடமிருந்தௌ வாங்கியவர் பெற முடியாது. ஆக எல்லா விற்பனையும் முறைப்படுத்தப்பட்டு ஒரே இணைய தளத்தில் ஒருங்கிணைக்கப்படும். விற்றவர் வாங்கியவர் இருவருமே ஒரே மாதிரி தான் கணக்கு காட்ட முடியும். வரி ஏய்ப்பு என்பது குறைந்து விட வாய்ப்பு உள்ளது.

பதிவு செய்யப்பட நிறுவனங்கள் நேர்மையான முறையில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நடைமுறை சிக்கல்கள் எதுவும் பாதிப்பு இல்லை. கணக்கில் காட்டாமல் வியாபாரம் செய்பவர்கள் (மளிகை கடை, ஜூவல்லரி போன்றவை...) தான் சங்கடப்படவேண்டும். இனி அவர்கள் எல்லா கொள்முதலையும், விற்பனையையும் கணக்கில் காட்டி ஆக வேண்டும். இல்லாவிட்டால் வரி சலுகை கிடைக்காது.

PAN அடிப்படையிலான 15 இலக்க பதிவு எண், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதன் ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக கொடுக்கப்படுகிறது. அதன் முதல் 2 எழுத்துக்கள் மாநிலத்தையும் அடுத்த 11 எழுத்துக்கள் PANஎண்ணையும் அடுத்த இலக்கங்கள் அதன் கிளைகளையும் குறிக்கும். இதன் படி, ஒரு PAN வைத்திருக்கும் நபருக்கு என்னென்ன தொழில்கள் எத்தனை எத்தனை கிளைகள் இருக்கிறது என துல்லியமாக கணக்கிடப்பட்டு அவரது ஒட்டுமொத்த வருவாயையும் அளந்து அதற்கு தக்க வருமான வரி விதிக்க முடியும்.

ரிடர்ன் தாக்கல் செய்யும் முறை இப்போது இருக்கும் ஒரே நாள் என்பது மாறி மூன்று முறை என மாற்றப்படுகிறது. அதாவது 10 ஆம் தேதிக்குள் நாம் விற்பனை விபரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். 15 ஆம் தேதி நமது கொள்முதல் விவரங்களை இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். அதாவது நமக்கு பொருளை விற்றவர்கள் 10 ஆம் தேதி தங்களது விற்பனையை பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அது 15 ஆம் தேதி நமது கணக்கில் ஆட்டோமேட்டிக்காக லிஸ்ட் ஆகி விடும். அதை நாம் சரிபார்த்தால் போதுமானது. மற்றபடி நாம் புதிதாக எந்த இடைச்செருகலையும் செய்ய முடியாது. 20 ஆம் தேதிக்குள் வரி செலுத்தி ரிடர்னை தாக்கல் செய்து விட வேண்டும்.

இந்த மொத்த நடைமுறைகள் பற்றியும் மத்திய அரசு சமீபத்தில் மாடல் லா (Model Law) என விரிவாக ஒரு செயல் திட்ட அறிக்கையை வெளியீட்டு இருந்தது. அதை முழுமையாக படித்துப்பார்த்தபோது எனக்கு தோன்றியது என்னவென்றால்.. எதற்காக மெனக்கெட்டு இந்த அரசு இப்படி ஒரு அரசியல் சாசன சட்ட திருத்தை கொண்டு வருகிறது? இப்போதிருக்கும் சட்டங்களிலேயே சிறு சிறு மாற்றங்கள் செய்தால் போதுமானதாச்சே என்று தான் தோன்றியது. ஜஸ்ட் இப்போதிருக்கும் CST வரிக்கு செட்ஆஃப் அறிவித்தால் போதும். மற்ற வரி முறைகளில் மாற்றம் இல்லை. வரி விகிதத்தை கவுன்சில் கூடி ஒரே வரி விகிதத்தை நாடு முழுதும் நிர்ணயித்தால் போச்சு. அதே மாதிரி கொள்முதல் கணக்கை இப்போதிருக்கும் வணிக வரி இணையதளத்திலேயே செயல்படுத்தலாம். இன்னமும் கூட எதற்காக ஒரு தனி சட்டம் என்பது புரியவில்லை.

அவர்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்பது யாருக்கு தெரியும்?விடுங்கள்.

வரி தாக்கல் செய்வோரை பொறுத்தவரை... இந்த புதிய GST முறையில்  இனி அனைத்து பரிமாற்றங்களுக்கும் முறையாக கணக்கு வழக்குகளை வைத்து கொள்ளவேண்டும். அதை முறையாக ஒவ்வொரு மாதமும் இணைய தளம் வழியாக பதிவும் செய்தாக வேண்டும். அது ஒன்று தான் சிக்கல். F Form, CForm, H Form, I Form என எந்த தலைவலியும் இனி இல்லை. எல்லா ஸ்டாக்கும் தெளிவாக கணக்கீட்டு வைத்திருக்க வேண்டும்.

எக்ஸைஸ், சர்வீஸ் டாக்ஸ்,  CST VAT என தனித்தனியாக ரிட்டர்ன் தாக்கல் செய்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அலுவலரை கண்டு அதை தாக்கல் செய்து அவர்கள் கேட்கும் ஒவ்வொரு சந்தேகத்துக்கும் நோட்டீஸ்களுக்கும் பதிலளித்துக்கொண்டு இருக்க வேண்டியதில்லை. ஒரே ரிட்டர்ன், ஒரே அலுவலகம், ஒரே கேள்வி, ஒரே பதில். அம்புட்டு தேன். அந்த வகையில் அது ஒரு பெரிய ஆறுதல்.

சுருக்கமாக பார்த்தால் நேர்மையாக வியாபாரம் செய்வோருக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு எல்லாம் கணக்கு காட்டாமல் கருப்பு பண வியாபாரம் செய்வோருக்கு தான். எப்படியும் விலைகள் உயரும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் வரிகள் செட் ஆஃப் செய்துகொண்டே இருக்கும்போது மெல்ல மெல்ல விலை வீழ்ச்சி அடைந்து இயல்பான நிலைக்கு திரும்பும். அரசு விற்பனை விலைக்கு ஒரு செக் பாயிண்ட் வைத்தாக வேண்டும். அதாவது வாங்கும் விலைக்கு குறையாமல் விற்பனை விலை இருக்கவேண்டும் என நிர்ணயித்தாக வேண்டும்.  இல்லையென்றால் அரசுக்கான வரி வருவாய் மிக மிக குறைந்து விடும்.


இனி மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனைகள், தமிழகம், கேரளம், மேற்கு வங்காளம் என சில மாநிலங்கள் ஏன் இந்த சட்டத்தி எதிர்க்கிறது என்பதை பற்றி எல்லாம் அடுத்த பதிவில்... 



http://satheeshchennai.blogspot.in/2016/08/gst-3.html

ஜி.எஸ்.டி (GST) – என் பார்வையில் - 2

ஒரு வழியாக ஜி.எஸ்.டி மசோதா ராஜ்ய சபையில் பாசாகி இருக்கிறது.

ஜி.எஸ்.டி குறித்த எனது முந்தைய பதிவை ‘இங்கே’ [Click Here] படித்து விட்டவர்களுக்கு தொடர்ந்து நான் சொல்ல போகும் விஷயங்கள் எளிதில் விளங்கும்.

லோக் சபாவில் பாசான ஜி.எஸ்.டி ராஜ்ய சபாவில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது. அதிமுக எதிர்க்கும் என்பதால் அதிமுக அல்லாத இதர மாநில கட்சிகளையும் காங்கிரசையும் சரிக்கட்டும் வேலையில் இறங்கிய பாஜக அதில் மிக அபாரமான வெற்றியும் பெற்றிருக்கிறது. நிதி அமைச்சர் ஜெட்லியும் பிரதமர் மோடியும் எந்தவித ஈகோவும் இல்லாமல் பாராளுமன்ற மைய மண்டபத்திலேயே காங்கிரஸ் மற்றும் இதர கட்சி தலைவர்களை கேஷுவலாக சந்தித்து பேசி ஒப்புதல் பெற்று விட்டார்கள். மிக ஆரோக்கியமான பாராட்டத்தக்க விஷயம் இது. ஆனால் இதனால் எல்லாம் நான் மகிழ்ச்சி அடைந்துவிடுவதில்லை. உனமையான சவால்கள் இனி தான் இருக்கிறது. ஒவ்வொன்றாக பார்ப்போமா?



நிர்வாக ரீதியான சவால்கள் தான் மிக மிக கடினமானது.

இந்த சட்டத்தை 2017 ஏப்ரல் 1 முதல் அமல் செய்யவேண்டும் என மத்திய அரசு சொன்னாலும், அது அவ்வளவு எளிதல்ல. அதனால் மத்திய அரசு மேலும் இரண்டு ஆப்ஷன்ஸ் கைவசம் வைத்திருக்கிறது. ஒன்று 2017 அக்டோபர் 1 முதல் அமல் செய்வது. ஆனால் பல கார்போரேட் நிறுவனங்கள் இந்த திட்டத்தை எதிர்க்கின்றன. நிதி ஆண்டில் இடையில் இருந்து வரி விதிப்பு முறை மாற்றம் என்றால் அது கம்பெனிகளின் வரவு செலவுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு நடை முறை சிக்கல்களும் அதிகம். அடுத்த ஆப்ஷன், 2018 ஜனவரி 1 முதல் அமல் செய்வது. ஏற்கனவே நிதி ஆண்டை இப்போதிருக்கும் ஏப்ரல் – மார்ச் என்பதில் இருந்து ஜனவரி – டிசம்பர் என மாற்றுவதற்கான சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், அதை நிறைவேற்றி அதனோடு சேர்ந்து 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி தொடங்கி அமல் செய்ய முடியும் என அரசு நினைக்கிறது. எனக்கென்னவோ இது தான் கடைசியில் சாத்தியமாகும் என தோணுது.

ஏன் 2017 ஏப்ரல் 1 முதல் அமல் செய்ய முடியாது? சுருக்கமாக பார்ப்போமா?

லோக்சபாவில் பாசான ஜி.எஸ்.டி மசோதா இப்போது ராஜ்ய சபையிலும் பாஸ் ஆகி இருக்கிறது. மீண்டும் லோக் சபாவில் அப்ரூவ் செய்யப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவர் சைன் செய்ததும் அது சட்டமாகிவிடும்.

இது ஒரு அரசியல் சாசன சட்ட திருத்தம் என்பதால் 50% மாநிலங்களின் ஒப்புதல் வேண்டும். அதாவது அடுத்த 30 நாட்களுக்குள் 17 மாநிலங்கள் தங்கள் சட்டசபையில் இந்த மசோதாவுக்கு ஆதரவு பெற வேண்டும். அவையும் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்.

பாராளுமன்றம் இனி தனித்தனியாக சில சட்டங்களை உருவாக்க வேண்டும். அதாவது மாநிலங்களுக்குள்ளேயான SGST, மாநிலங்களுக்கு இடையிலான IGST, உற்பத்தி துறைக்கான CGST ஆகியவற்றுக்கான தனி தனி சட்டங்கள் வகுத்து அவற்றையும் பாராளுமன்றங்களில் தாக்கல் செய்து பாஸ் ஆக்கி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற வேண்டும்.

அதேபோல, மாநிலங்களும் தங்கள் மாநில நிறுவனங்களின் உற்பத்தி/வியாபாரம் தொடர்பான SGST சட்டங்கள் இயற்றி அதை சட்டசபைகளில் பாஸ் ஆக்கி அதற்கு ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதல்களை பெற்று சட்டம் ஆக்க வேண்டும்.

அடுத்தபடியாக ஜி.எஸ்.டி கவுன்சில் அமைக்கவேண்டும். இதில் மத்திய நிதி அமைச்சகம், மாநில நிதி அமைச்சர்கள் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.  இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூடி விவாதித்து தான் ஒவ்வொரு பொருளுக்குமான வரி நிர்ணயம் செய்யவேண்டும். இதில் பல சிக்கல்கள் உள்ளன. நான் ஏற்கனவே எனது முதல் பதிவில் சொன்னது போல ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் தங்கள் மாநில சிறப்பு பொருட்களுக்கு வரி கட்டமைப்பில் சலுகை கேட்கக்கூடும். அந்த பிரச்சனைகளை எல்லாம் விவாதித்து ‘ஒருமித்த’கருத்தின் அடிப்படையில் வரி நிர்ணயம், விதி முறைகள் (Acts & Rules),வழிகாட்டு நெறிமுறைகள் (Procedures) ஆகியவை இறுதி செய்யப்பட்டு அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். 

நிர்வாக ரீதியான அமைப்புக்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கிடையிலான வரி பிரச்சனைகள், நிதி பகிர்மான வழி முறைகள், பிரச்சனைகளை விவாதிப்பதற்கான தீர்ப்பாயங்கள் போன்ற பல அமைப்புகள் சட்ட ரீதியாக அமைக்கப்பட்டு அதற்கு தகுந்த உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

இவை எல்லாம் பிசிகல் அமைப்புகள்.

விர்ச்சுவல் அமைப்புக்கள் என எடுத்துக்கொண்டால் GSTN என சொல்லப்படக்கூடிய ஜி.எஸ்.டி நெட்வர்க் இணைய தள அடிப்படையில் அமைக்கவேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியாக SGST நெட்வர்க் அமைக்கப்பட்டு அது GSTN வலைப்பின்னலில் இணைக்கவேண்டும். இப்போதிருக்கும் VAT, Excise, Service Tax கட்டமைப்புக்களுக்கு மாற்றாக இந்த புதிய GSTN நெட்வர்க் வருவதால் VAT, Excise, Service Tax ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒற்றை சாளரமாக இந்த புதிய நெட்வர்க் அமைக்க வேண்டும்.

அதன் பின், அதில் பணி புரிய உள்ள அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும்,ஒவ்வொரு வணிக வரி அலுவலக ஊழியர்களுக்கும், செக்போஸ்ட் ஆய்வாளர்களுக்கும் இந்த முறையை அறிமுகம் செய்து அவர்களுக்கு GSTNபயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். அதேபோல நாடு முழுதும் உள்ள 39 கோடி நிறுவனங்களின் மறைமுக வரி ஊழியர்களுக்கும் (Indirect Tax officials) இந்த புதிய இணைய தளம் மற்றும் அதில் வரி விதிப்பு முறைகள் பதிவேற்றுவது குறித்த பயிற்சிகள் கொடுக்க வேண்டும்.  அனைத்து நிறுவனங்களுக்கும் 15 இலக்க புதிய அடையாள எண் ஒதுக்கப்படவேண்டும். இவை PAN அடிப்படையில் இருக்கும். GST முழுக்க முழுக்க இணைய வழி வரி கட்டமைப்பு என்பதால் அனைத்து நிறுவனங்களும் (சிறு, குறு நிறுவனங்கள் உட்பட) தங்கள் அலுவலகத்தில் இணைய வசதியுடன் கூடிய கணினி அமைத்து அதில் வரி செலுத்துவதற்கான முறையை பயின்று கொள்ள வேண்டும்.

இதில் மற்றொரு பெரிய சிக்கல் என்னவென்றால், சென்ட்ரல் எக்ஸைஸ் &சர்வீஸ் டாக்ஸ் ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைந்த GST கொண்டுவரப்படுவதால் அவற்றில் பணி புரிந்து வரும் 17 லட்சம் ஊழியர்களுக்கு அவர்களது தற்போதைய பணி நிலை குறையாத அளவில் GST வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். அதில் என்னென்ன எதிர்ப்புக்களை ஊழியர் சங்கங்கள் கொண்டு வரும் என தெரியவில்லை. ஏற்கனவே இதே போன்ற ஒரு சிக்கலை இந்தியன் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா இணைப்பின் பொது நாம் சந்தித்தது நினைவிருக்கலாம். (அது குறித்த எனது பதிவை ‘இங்கே’ [Click Here]படிக்கலாம்)

இவை எல்லாம் செய்து முடித்தால் தான் முழுமையாக GST அமல்ப்படுத்த முடியும் என்பதால் 2017 ஏப்ரல் 1 என்பது சந்தேகம் தான்.

நிர்வாக ரீதியான சிக்கல்கள் தவிர அரசியல் ரீதியான சிக்கல்களும் உள்ளன:

ஏற்கனவே தமிழகம் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. இந்த சட்டம் வந்தால் தமிழகம் வெகுவாக பாதிக்கப்படும் என்பது தான் நமது அச்சம். அது நியாயமானதும் கூட. ஒரு வகையில் பார்த்தால் தமிழகம் இப்போது காட்டும் இந்த உறுதியான எதிர்ப்பு தொடருமானால் தமிழகத்தில் இந்த சட்டம் அமல்ப்படுத்தப்படாமலேயே போக வாய்ப்புள்ளது. அப்படியான பட்சத்தில் GST அமைப்பு செயல்படவே முடியாது.

தமிழகத்தை தொடர்ந்து, இப்போது கேரளா மேற்கு வங்காளம் ஆகியவையும் இந்த ஜி‌எஸ்‌டி சட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றன.  இவற்றை எல்லாம் மத்திய அரசு எப்படி சமாளிக்க போகிறது என தெரியவில்லை.

இந்தியா போன்ற ஒரு மாநிலங்களின் கூட்டமைப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டே இருப்பது வாடிக்கை. அப்படி புதிய அரசு வந்து அதன் நிதி அமைச்சர் GST கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு அவர்களது கட்சி கொள்கை படியான மாறுபாடான நிலைப்பாடை எடுக்க நேர்ந்தால் அதுவும் GST கவுன்சிலுக்கு சிக்கல் தான்.

இது தவிர, இப்போது ஒரு சில அட்ஜஸ்ட்மெண்டுகளை மட்டுமே மத்திய அரசு செய்திருக்கிறதே அல்லாமல் முக்கியமான திருத்தங்களை முழுமையாக இன்னமும் செய்யவில்லை. அதெல்லாம் செய்யப்பட்டால் தான் காங்கிரசும் இதர கட்சிகளும் GST அமலாக ஒத்துழைக்கும் என்பது அடுத்த சிக்கல்.

காங்கிரஸ் வைத்த முக்கியமான ஐந்து கோரிக்கைகளில் சிலவற்றை மத்திய அரசு ஏற்றதால் தான் இந்த சட்டத்துக்கு காங்கிரஸ் ஒப்புதல் அளிக்க சம்மதித்து இருக்கிறது. அதாவது மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களுக்கு 1% கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்யவேண்டும் என காங்கிரஸ் கேட்டது. அப்படி கூடுதல் வரி விதித்தால் அது சீரான வரி விதிப்பை தகர்த்துவிடும் என்பது அவர்களது அச்சம். அதை முதலில் பிடிவாதமாக மறுத்த அரசு, பின்னர் உண்மை அறிந்து இறங்கி வந்து ரத்து செய்திருக்கிறது.

மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடை கொடுப்பதற்கு ஒரு வழிமுறையை உருவாக்கவேண்டும் என்பது மற்றொரு கோரிக்கை. இது மாநிலங்களின் பொருளாதார நலன் சார்ந்த கோரிக்கை. பாஜக முதல் ஐந்து வருடங்களுக்கு மட்டும் இழப்பீடு தரும் என முதலில் சொல்லி இருந்தது. ஆனால் இப்போது காங்கிரஸின் கோரிக்கையில் உள்ள நியாயம் அறிந்து இழப்பீடு குறித்து முடிவெடுக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்து இருக்கிறது.

வரி குறித்த வழக்குகள் சச்சரவுகளை விவாதித்து முடிவெடுக்க தனியாக ஒரு தீர்வாயத்தை காங்கிரஸ் கேட்டது. முதல் முதலில் ஜி.எஸ்.டி சட்டத்தை காங்கிரஸ் அறிமுகம் செய்தபோது அதில் இந்த சரத்து இருந்தது. ஆனால் பின்னர் வந்த பாஜக அந்த விதியை ரத்து செய்து இருந்தது. இப்போது காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று அதை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

வரி விதிப்பு 18% க்குள் இருக்கவேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. அது தான் இந்திய பொருளாதாரத்துக்கு நல்லது என்பது அவர்கள் நிலை. ஆனால் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. வரி விதிப்பு பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது என ஜெட்லி சொல்லி விட்டார். “வரி தொடர்பான சட்டத்தில் வரி சதவீதம் சொல்லப்படவில்லை என்றால் அது வரி சட்டமே அல்ல” என சிதம்பரம் தெரிவித்து இருக்கிறார். வரி சதவீதம் என்ன என்பதையே சொல்லாமல் மொட்டையாக சட்டத்தை நிறைவேற்றி இருப்பது தவறு என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. இப்போதுள்ள சூழலில் 18% வரி விதிப்பது போதாது, கூடுதல் வரிவிதிப்பு இருக்கக்கூடும் என்பதை சூசகமாக சொல்லி இருக்கும் நிதி அமைச்சர், ஆனால் அது 27% க்கு குறைவாக இருக்கும் என கோடிட்டு காட்டி இருக்கிறார். எனவே எனது கணிப்பு படி 22 – 24% வரை வரி இருக்கக்கூடும் என நினைக்கிறேன். அப்படி ஆனால் ஒட்டுமொத்த சிறு தொழிலும் நசிந்து விடக்கூடும். பெரிய நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் பிழைக்க முடியும் என்கிற நிலை வரும். ஆனால் அப்படி உயர் வரி விகிதம் விதிக்கப்பட்டால் அதை காங்கிரஸ் அனுமதிக்காது என தெளிவாக சிதம்பரம் சொல்லி இருக்கிறார். அது நமக்கெல்லாம் ஒரு சின்ன ஆறுதல்.

ஆக நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இத்தனை சிக்கலைகளையும் கடந்து ஜிஎஸ்டி எப்போது செயலாக்கத்துக்கு வரும் என தெரியவில்லை. அப்படி செயல்பாட்டுக்கு வரும்பொழுது அது எந்த மாதிரி இருக்கும்?என்னென்ன நடைமுறைகள் மாறும்? வரி தாக்கல் செய்வோருக்கு உள்ள சாதகங்கள் பாதகங்கள் என்னென்ன? என்பதை எல்லாம் அடுத்த பதிவில் விரிவாக பேசலாம் நண்பர்களே!



http://satheeshchennai.blogspot.in/2016/08/gst-2.html