Wednesday, 22 July 2015

ஜிஎஸ்டி-யின் பெரும்பாலான ஷரத்துகளுக்கு மாநிலங்களவை குழு ஒப்புதல்

சரக்கு மற்றும் சேவை வரி குறித்து மாநிலங்களவை தேர்வு குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. பாரதிய ஜனதாவின் பூபேந்தர் யாதவ் தலைமையிலான குழு இதனை சமர்ப்பித்தது. பெரும்பாலான கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதே சமயத்தில் காங்கிரஸ், அதிமுக மற்றும் இடதுசாரிகள் தங்களது மாற்றுக்கருத்தினை தெரிவித்திருக்கின்றன.
இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேறியது. இனி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்.
மாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த மசோதா நிறைவேறும். ஜிஎஸ்டியின் பெரும்பாலான ஷரத்துகளுக்கு மாநிலங்களவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆளும் கட்சிக்கு மாநிலங் களவையில் பலம் இல்லாததால் மாநில கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளை மத்திய அரசு நம்பி இருக்கிறது. இந்த சட்டத்தை அமல் செய்தால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுவதற்கு மத்திய அரசு 5 வருடங்கள் நிதி உதவி செய்யும் என்று இந்த குழு பரிந்துரை செய்திருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மறைமுக வரியில் செய்யப்படும் மிகப்பெரிய சீர்திருத்தம் இதுதான். சரக்கு மற்றும் சேவை வரியை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதனை கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து முயற்சி களும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி கொண்டு வரும் பட்சத்தில் இந்திய பொருளாதாரத்துக்கு நல்லது என்று வருவாய் துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.




http://tamil.thehindu.com/business/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B7%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article7455490.ece?homepage=true

நில மசோதா போல ஜி.எஸ்.டி.,யும் 'புஸ்?' ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் மறுப்பு

புதுடில்லி : சரக்கு மற்றும் சேவை வரியில், மாநில அரசுகள் கோரிய பெரும்பாலான திருத்தங்களை, ராஜ்யசபா குழு ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும், அந்த மசோதாவை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என, அ.தி.மு.க., திரிணமுல் காங்., இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உறுதியாக அறிவித்துள்ளதால், மாற்றியமைக்கப்பட்ட அந்த மசோதா, ராஜ்யசபாவில், நில மசோதா முடங்கியுள்ளது போல முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான நாடுகளில், ஒரே மாதிரியான வரி முறை உள்ளது. ஆனால், நம் நாட்டில், மாநிலத்திற்கு மாநிலம் வரி முறை மாறுபடுகிறது. இதை மாற்றி, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான மறைமுக வரியாக, 'வாட்' எனப்படும், மதிப்பு கூட்டு வரியை பின்பற்ற முடிவு செய்யப்பட்டது.

வரி வீதம்:


இதன் மூலம், அமைக்கப்பட உள்ள ஒரு ஆணையத்தால், நாட்டின் அனைத்து பொருட்களுக்கும், சேவைகளுக்கும், வரி வீதம் நிர்ணயிக்கப்படும். இது, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், இந்த புதிய வரி முறை அமலுக்கு வரும் என, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா, மத்திய கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லாத, ராஜ்யசபாவில் முடங்கியது. அதில், மாநிலங்கள் கோரிய திருத்தங்களை மேற்கொள்ள, குழு அமைக்கப்பட்டது.அந்தக் குழுவில், மாநில அரசுகள் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும், விருப்பங்களையும் தெரிவித்தன. அவற்றில், பெரும்பாலானவை, குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அறிக்கையை, எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமேயானால், நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால், மூன்றில் இரண்டு பங்கு, எம்.பி.,க்களின் ஆதரவு வேண்டும்.

அறிக்கை:


அதற்காகத் தான், எதிர்க் கட்சிகளின் கருத்துகளையும், பா.ஜ.,வைச் சேர்ந்த, பூபேந்தர் யாதவ் தலைமையிலான இந்தக் குழு ஏற்றுக் கொண்டு, அந்தக் குழு, நேற்று தன் அறிக்கையை, ராஜ்யசபாவில் தாக்கல் செய்தது.ஆனால், நிலைமை வேறு மாதிரி உள்ளது. ஜி.எஸ்.டி., மசோதாவை ஏற்க முடியாது என, முக்கிய எதிர்க்கட்சிகள் அறிவித்துஉள்ளன.

கண்டிப்பாக அமலாகும்!


அடுத்த ஆண்டு ஏப்ரலில், சரக்கு மற்றும் சேவை வரியை நாடு முழுவதும் அமல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றுகின்றன. நியாயமான சதவீதத்தில், ஜி.எஸ்.டி., வரி நிர்ணயம் செய்யப்படும். அவ்வாறு செய்தால் தான், இந்த வரி முறை, நாடு முழுமைக்கும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும்.
சக்திகந்த தாஸ், 
வருவாய் துறை செயலர்

ஐந்தாண்டுகளுக்கு இழப்பீடு வேண்டுமாம்!


தமிழகத்தின், அ.தி.மு.க., மேற்கு வங்கத்தின் திரிணமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற கட்சிகள் தெரிவித்துள்ள கோரிக்கைகள்:
* முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, மாநிலங்களுக்கு முழு அளவிலான இழப்பீடு வழங்க வேண்டும். இப்போதைய நிலையில், முதல் மூன்று ஆண்டுகளுக்கு, 100 சதவீதம், நான்காம் ஆண்டில், 75 சதவீதம், ஐந்தாம் ஆண்டில், 50 சதவீத இழப்பீடு வழங்க மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. இதை, ஐந்து ஆண்டுகளுக்கும், 100 சதவீத இழப்பீடு வழங்க கோரப்பட்டுள்ளது.
*பொதுவாக விதிக்கப்படும் வரிகளில், மாநிலங்களுக்கு என, கூடுதலாக, 1 சதவீத வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சற்று வித்தியாசமாக அணுகியுள்ள குழு, அனைத்து பொருட்களுக்கும் என்றில்லாமல், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் சில பொருட்களுக்கு மட்டும், 1 சதவீத வரியை மாநிலங்களுக்கு விதிக்கலாம் என, தெரிவித்துள்ளது. 
*பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை, மாநில அரசுகளிடம் விட்டு விட வேண்டும். அதில், மத்திய அரசு தலையிடக் கூடாது என்ற, அ.தி.மு.க.,வின் கோரிக்கையை பரிசீலித்த குழு, அதற்கான முடிவு, ஜி.எஸ்.டி., குழுவில் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
எனினும், 'ஜி.எஸ்.டி., வரி முறையே சரியில்லை; அதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம்' என, தெரிவித்து, காங்கிரஸ், இடதுசாரிகள், அ.தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்., கட்சிகள், ராஜ்யசபா தேர்வு குழுவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், 'இப்போதைய நிலையில், ஜி.எஸ்.டி., மசோதாவை ஏற்றுக் கொள்ள மாட்டோம்' என, தெரிவித்துள்ளன.இதனால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள நில மசோதா போல, ஜி.எஸ்.டி., மசோதாவும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



http://www.dinamalar.com/news_detail.asp?id=1302072