ஜூலை 1 முதல், நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை அமல்படுத்துகிறது மத்திய அரசு. 'இந்த வரியின் வருகையால் பொருட்களின் விலை கூடும், வரி செலுத்தும் முறைகள் மாறும்' என வணிகர்கள் பயம் கலந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஜி.எஸ்.டி., வரியை மேலோட்டமாக பார்த்தால் அதில் உள்ள நன்மைகள் வெளியே தெரியாது. அதன் விதிகளை ஒவ்வொன்றாக படித்துப் பார்த்தால் தான், நாட்டின் வளர்ச்சிக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறது என்ற உண்மை புரியும்.வணிகர்கள் வரி விதிகளை எல்லாம் படித்து, புரிந்து கொள்ளலாம். ஆனால், படித்தபின் வரும் சந்தேகங்களை அதற்குரிய நிபுணர்களிடம் கேட்டால் தானே தெளிவு பெற முடியும். இதற்காவே ஜி.எஸ்.டி., வரி குறித்து, வணிகர்களின் பயம் மற்றும் சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் தினமலர் நாளிதழ் சார்பில் 'ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு நிகழ்ச்சி' நடந்தது. மதுரை தமிழ் இசைச் சங்க அறங்காவலர் மோகன் காந்தி வாழ்த்தி பேசினார்.அரங்க உதவி: தமிழ் இசைச் சங்கம், நாலேட்ஜ் பார்ட்னர்: ஸ்ரீ குரு கிருபா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்.
வரி பயங்கரவாத விடுதலை
இந்த நிகழ்ச்சியில் மதுரை தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேல் பேசியதாவது: ஜி.எஸ்.டி., வரி, பயங்கரவாதத்தில் இருந்து விடுதலை அளிக்கும் அருமையான சட்டம். உதாரணமாக அரிசிக்கு வரி விலக்கு உண்டு, அரிசி குருணைக்கு வரி உண்டா இல்லையா என சட்டத்தில் குறிப்பிடவில்லை. இப்படி வரி குறித்து சொல்லாத பொருட்களுக்கு
அதிக வரி விதிக்கப்படுகிறது; இதுதான் 'வரி பயங்கரவாதம்' என்கிறோம்.மறைமுக வரிகள்
இருக்காது ஜி.எஸ்.டி., வரவிற்கு பின் கூடுதல் வரிகள் மற்றும் இதுவரை நம் நாட்டில் இருந்த உற்பத்தி, சேவை, மத்திய விற்பனை, மதிப்புக்கூட்டு, ஆடம்பரம், கேளிக்கை போன்ற வரிகள் இனி இருக்காது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒரு வரி விதிப்பு முறை இருந்ததால்தான், நம் நாட்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் இல்லை. ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின் நாடு முழுவதும் ஒரே முறையிலான வரிகள் விதிக்கப்படும். வரி குழப்பங்களால் விலகிப்
போன வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நம் நாட்டில் முதலீடு செய்ய முன் வருவர்.
டெக்ஸ்டைல் துறையினர் வரவேற்பு : ஜி.எஸ்.டி., சட்டம் காலத்தின் கட்டாயம்; இதனால், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 3 சதவீதம் கூடும். டெக்ஸ்டைல் துறையினர் ஜி.எஸ்.டி., வரியை வரவேற்கின்றனர். இரண்டு கோடி பருத்தி விவசாயிகள் பயன் பெறுவர். ஜி.எஸ்.டி., 'ஒரு வரி சீர்திருத்தம்'. வணிகர்கள் பயப்பட தேவை இல்லை. இந்த சட்டத்தில் எதெல்லாம் சரக்கு, சேவை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அசையும் பொருட்கள் எல்லாம் சரக்கு. இதில், ரூபாய், பங்குகள் மட்டும் சரக்குகள் இல்லை. சரக்குகள் அல்லாத அனைத்தும் சேவைகளாக எடுத்துக் கொள்ளப்படும்.
ஜி.எஸ்.டி., இணைய போர்டல் : ஜி.எஸ்.டி., வரி முழுவதும் ஜி.எஸ்.டி., இணையத் தளத்தில் தான் கணக்கிடப்படுகிறது. 'ஜி.எஸ்.டி., போர்டல் வணிக பில்கள் எல்லாம், ஒரு மாதத்திற்கு 300 முறை ஒப்பிட்டு பார்க்கும். வணிகர்கள் தங்கள் வணிக நடைமுறைகளை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் போர்டலில் பதிவு செய்ய வேண்டும். இவை அனைத்திற்கும் ஒரே ஒரு ரிட்டர்ன் தான். நாடு முழுவதும் ஒரே வரியாக இருப்பதால், சரக்குகளை எங்கு விற்றாலும் உள்ளீட்டு வரி (இன்புட் டாக்ஸ்) எடுத்துக் கொள்ள முடியும். வரிகளை முறையாக கையாள வேண்டியது வணிகர்களின் பெரிய கடமை.
வரிகளை இன்புட் எடுக்கலாம் : இந்த வரி சட்டத்தில் நிலக்கடலைக்கு 5 சதவீதம், கடலை மிட்டாய்க்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற முரண்பாடுகள் அடுத்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்; இல்லை என்றால் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். வணிக மேம்பாட்டிற்காக வாங்கும் பொருட்களின் வரிகளை திரும்ப பெற வணிகர்கள், விற்பனையாளரிடம் ஜி.எஸ்.டி., எண்ணை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். ஜூன் 30ல் உள்ள இருப்பு சரக்கிற்கு, ஜூலை 1 முதல் 28 சதவீதம் வரி என்றாலும், அதில் உள்ள கலால் வரியை இன்புட் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பேசினார்.
மாநில அரசிற்கு மது வரி
ஜெ.பாலசுப்பிரமணியன், ஆடிட்டர், மதுரை : ஜி.எஸ்.டி., சட்டத்திற்கான விதை 1992ல் விதைக்கப்பட்டது. இந்த வரி முறையில் மதுவுக்கான வரி மற்றும் வருமானங்கள் மாநில அரசிற்கு தான் சொந்தம் என்று கூறப்பட்டுள்ளது. உள்மாநில வர்த்தகத்திற்கு சி.ஜி.எஸ்.டி., (மத்திய சரக்கு, சேவை வரி), எஸ்.ஜி.எஸ்.டி., (மாநில சரக்கு, சேவை வரி), இருமாநில வர்த்தகத்திற்கு இந்த இரண்டு வரிகளையும் இணைத்து ஐ.ஜி.எஸ்.டி., (ஒருங்கிணைந்த சரக்கு, சேவை வரி) விதிக்கப்படுகிறது.
மோடி ஒரு தீர்க்கதரிசி : ஒரு நிறுவன நிர்வாகம் தங்கள் தொழிலாளிக்கு 50 ஆயிரத்திற்கு மேல் பரிசுத் தொகை கொடுத்தால் கூட ஜி.எஸ்.டி., வரி கட்ட வேண்டும். முகவர்கள் முலம் சரக்குகளை கையாளும் போதும் வரி விதிக்கப்படும். நிலம், கட்டடம் சேவைகள் இல்லை என்பதால் அதற்கு ஜி.எஸ்.டி., வேண்டாம். ஒரு தொழிலாளி, முதலாளிக்கு செய்யும் சேவைக்கும் வரிகள் இல்லை. பிரதமர் மோடி ஒரு தீர்க்கதரிசி; அதனால் தான் வணிகர்களை ஒன்றிணைத்து செயல்பட வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வெளிப்படை தன்மையுடன் இந்த வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்கிறார்.
உற்பத்தி முதல் சப்ளை வரை : ஜி.எஸ்.டி.,வந்த பின் பதிவு செய்யாத வணிகரிடம் இருந்து, பதிவு செய்த வணிகர் சரக்கை வாங்கினால், பதிவு செய்த வணிகர் தான் வரியை செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை வாங்கும் போது அதில், எந்த பொருளின் விலை அதிகமோ அதற்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். ஜி.எஸ்.டி.,யில் பொருள் உற்பத்தி செய்த இடத்தில் இருந்து, சப்ளை செய்யப்படும் இடம் வரை வரி விகிதங்கள் மாறுபடும். வணிகம் சார்ந்த தொலைபேசி, ரயில் பயணம் செய்யும் வணிகர்கள் தங்கள் ஜி.எஸ்.டி., எண்ணை பதிவு செய்து சேவை வரியை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.வணிகர் ஒருவர் நுகர்வோரிடம் முன்பணம் வாங்கினால் அதற்கும் வரி செலுத்த வேண்டும். ஆனால், வாங்குபவர் பதிவு செய்திருந்தால் தான் அதில் உள்ள வரியை இன்புட் எடுக்க முடியும். அதனால், ஒவ்வொரு மாதமும் மறக்காமல் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். வணிகர்கள் தேவைக்கு மட்டும் சரக்குகளை வாங்கி இருப்பு வைத்திருந்தால் நல்லது.
விசிட்டிங் கார்டில் ஜி.எஸ்.டி., எண்
டி.ஆர்.சீனுவாசன், ஆடிட்டர், சென்னை : ஜி.எஸ்.டி., வந்த பின் வணிகர்கள் தங்கள் முதலீட்டை 3 மாதங்கள் சேமிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள் வரி கட்டவில்லை என்றால், நம்மிடம் சரக்கு வாங்கியவருக்கு எந்த பயன்களும் கிடைக்காது. நாம் வரி கட்டவில்லை என்ற விஷயத்தை ஜி.எஸ்.டி., போர்டல் ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிக் கொடுத்துவிடும். அதே போல் ஜூன் 30க்குள் எவ்வளவு சரக்கு இருக்கிறது என்பதையும் அரசிற்கு சொல்ல வேண்டும். சாப்ட்வேர்களில் வணிக கணக்குகளை எழுதுவோர், அதை ஜி.எஸ்.டி.,க்கு ஏற்றபடி மாற்றி அமைக்க வேண்டும். பதிவு செய்யாத வணிகர்கள் ஜி.எஸ்.டி., பயிற்சியாளர்கள் மூலம் தாக்கல் செய்யலாம். இன்னும் 2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி.,யில் 2 கோடி வணிகர்கள பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி, வணிகர்கள் எங்கு சென்றாலும் ஜி.எஸ்.டி., எண்ணை காண்பிக்க வேண்டும். எனவே, வணிகர்கள் தங்கள் விசிட்டிங் கார்டுகளில் ஜி.எஸ்.டி., எண்ணை அச்சிட்டு வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும்.
ஜூன் 15க்குள் ஜி.எஸ்.டி., பதியலாம்
எஸ்.சுந்தர்ராமன், ஆடிட்டர், சென்னை : ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்யாத வணிகர்கள் ஜூன் 15க்குள் பதிவு செய்து கொள்ளலாம். ஆண்டுக்கு 20 லட்சத்திற்கு மேல் வரி கட்டுபவர்கள் அவசியம் பதிவு செய்ய வேண்டும். 20 லட்சத்திற்கு கீழ் வரி கட்டுபவர்கள் விரும்பினால் பதிவு செய்யலாம்; கட்டாயம் இல்லை. ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வோர்க்கு, 20 லட்சம் வரி என்ற கட்டுப்பாடுகள் இல்லை. சில மாநிலங்களுக்கு 10 லட்சம் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மாதமும் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றால், ஜி.எஸ்.டி., பதிவு ரத்து செய்யப்படும், இன்புட் வரிகளை திரும்ப பெற முடியாது.இந்த வரி விதிப்பு சட்டத்தால் பொருட்களின் விலை கூடும் என்ற பயம் வேண்டாம். 'வணிகர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் போது, பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. வணிகத்திற்கான 'இன்வாய்ஸ்'ல் வரி, தள்ளுபடி என பிரித்து காண்பிக்க வேண்டும்.
பங்கேற்றவர்கள் சொன்னது என்ன?
வரி குறித்த பயம் நீங்கியது! : ஜி.எஸ்.டி., வரி குறித்து வர்த்தகர்கள் மத்தியில் ஒரு வித பயம் இருந்தது. அந்த பயத்தை நீக்கும் வகையில் சரியான நேரத்தில் நிகழ்ச்சியை தினமலர் நடத்தியது பாராட்டுக்குரியது. ஜி.எஸ்.டி., வரி குறித்த சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் வல்லுனர்கள் விளக்கமளித்தனர். இந்த வரி அமலாக்கத்திற்கு பிறகு ஏற்படும் நிலையை கூட விளக்கினர். ஜி.எஸ்.டி., வரியால் வர்த்தகர்கள் பயம் கொள்ள தேவையில்லை என நிகழ்ச்சி தெளிவுபடுத்தி விட்டது. 'குட்ஸ் அண்ட் சர்வீஸ்' என, 132 வெளிநாடுகளிலும் இத்தகைய வரியுள்ளது. ஏதோ இந்தியாவில் மட்டுமே இத்தகைய வரி விதிக்கப்படவில்லை.
என்.ஜெகதீசன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர்
பயனுள்ளதாக இருந்தது : ஜூலை முதல் தேதியிலிருந்து ஜி.எஸ்.டி., வரி அமலாகவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியை தினமலர் நடத்தியது பயனுள்ளதாக இருந்தது.
எஸ்.பி.ஜெயப்பிரகாசம், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர்
நிகழ்ச்சி நேர மேலாண்மை : ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி., வருமா, வராதா என்ற சந்தேகத்துடன் வந்தோம். நிச்சயம் அமலாகும். பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். பல சந்தேகங்களுக்கு, பதில் கிடைத்தது. முக்கியமான விஷயம்... தினமலர் நாளிதழின் நிகழ்ச்சி
நேர மேலாண்மை சூப்பர்.
பிரேம்குமார், சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், மதுரை
முழுமையாக புரிந்தது : நிகழ்ச்சி பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. ஜி.எஸ்.டி., வரி குறித்து, தினமலர் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பாராட்டுகிறோம். ஜி.எஸ்.டி.,யை புத்தகம் மூலம் தெரிந்து கொள்ள பல நாட்கள் ஆகும். ஆனால், வெறும் மூன்றே மணி நேரத்தில் ஜி.எஸ்.டி., வரியை புரியவைத்துவிட்டனர். மதுரையில் மீண்டும் ஒரு சித்திரை திருவிழா கூட்டத்தை பார்த்து வியந்து போனேன்.
வி.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் செயலாளர், எண்ணெய் வியாபாரிகள் சங்கம்.
தெளிவு பிறந்தது... பயம் நீங்கியது! : தேர்வுக்கு செல்லும் மாணவனின் மனநிலையில் நானும், எங்கள் சங்க உறுப்பினர்களும் வந்தோம். ஜி.எஸ்.டி., நல்லதா, கெட்டதா என்ற குழப்பத்துடன் வந்த எங்களுக்கு, நிபுணர்கள் அளித்த பதில்களால் தெளிவு ஏற்பட்டது. ஜி.எஸ்.டி.,க்கு நாங்கள் தயாராகிவிட்டோம். எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு தினமலர் நாளிதழில் வெளிவந்த, வெளிவரும் ஜி.எஸ்.டி., செய்திகளை அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கே.எல்.குமார், தலைவர், மதுரை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்
நேர்த்தியான ஏற்பாடு : நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிக நேர்த்தியாக, சிறப்பாக இருந்தது. ரத்தினவேல் மற்றும் ஆடிட்டர்கள் ஜி.எஸ்.டி., குறித்த பொதுவான கருத்துக்களை தெளிவாக விளக்கி கூறினார்கள். கணக்குகளை கையாளும் முறைகள் குறித்தும் தெரிந்து கொண்டது பயனுள்ளதாக இருந்தது.
எஸ்.சங்கர சீத்தாராமன், நிர்வாக இயக்குனர், விஸ்வாஸ் புரமோட்டர்ஸ்.
நிரம்பி வழிந்த அரங்கம் : ஜி.எஸ்.டி., குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வணிகர்கள், வர்த்தகர்கள், கணக்கு, தணிக்கை அலுவலர்கள், பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள் என ராஜா முத்தையா மன்றத்தின் அரங்கம் முழுவதும் கூட்டத்தில் ரம்பி
வழிந்தது. அரங்கிற்குள் இடம் இல்லாத காரணத்தால், வெளியே நின்றவர்கள் நிகழ்ச்சியை பார்க்க வசதியாக, அருகில் உள்ள அரங்கில் பெரிய திரையில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
'ஜி.எஸ்.டி.,' ஒரு பாகுபலி
நிகழ்ச்சிக்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் ஜி.எஸ்.டி., கூட்டத்தை பார்த்து 'பாகுபலி' படத்திற்கு கூட இவ்வளவு கூட்டம் வந்ததில்லை என வியப்புடன் கூறிச் சென்றார்.''காலம் பொன் போன்றது என்பதை சரியாக புரிந்து கொண்டு, அறிவித்தவாறு சரியாக 10:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கி 1:00 மணிக்கு நிறைவு பெற்றது. இப்படி நடத்துவதில் தினமலர் நாளிதழுக்கு நிகர், தினமலர் நாளிதழ் தான்,'' என பல வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஜி.எஸ்.டி., கேள்வி - பதில்
நிகழ்ச்சியின் முடிவில் வணிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிபுணர்கள் அளித்த பதில்கள்...
* எவ்வளவு ரூபாய்க்கு மேல் இ.வே., பில் தேவை
50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட வணிகத்திற்கு இ.வே., பில் அவசியம்.
* பொருட்களின் விலை குறையுமா
ஜி.எஸ்.டி.,யில் சில பொருட்களுக்கு ஏற்கனவே இருந்த கலால், மதிப்புக்கூட்டு வரிகளின் கூட்டுத் தொகையை விட, வரிகள் குறைவாக இருப்பதால் விலை குறையும்.
* வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை
1211 பொருட்களுக்கு நிர்ணயம் செய்துள்ளனர், சுமார் 80 பொருட்கள் வரி விலக்கு பெற்றுள்ளது.
* ஜி.எஸ்.டி., வரி விகிதங்கள்
சரக்கு, சேவைகளின் தன்மைக்கு ஏற்ப 5, 12, 18, 28 சதவீதங்கள்.
* ஓட்டல் உணவுகளுக்கு எவ்வளவு வரி
ஏ.சி., ஓட்டல்களுக்கு 18, ஏ.சி., இல்லாத
ஓட்டல்களுக்கு 12 சதவீதம்.
சந்தேகமா கேளுங்கள் : தினமலர் ஜி.எஸ்.டி., விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இயலாத வணிகர்கள், பெயர் மற்றும் அலைபேசி எண்ணை குறிப்பிட்டு, ஜி.எஸ்.டி., சந்தேகம், தினமலர், மதுரை 16 என்ற, முகவரிக்கு எழுதலாம். mdureporting@dinamalar.inக்கு மின்னஞ்சல் மூலம் கேள்விகளை அனுப்பலாம். பதில்கள் தினமலர் நாளிதழில் வெளியாகும்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1786556