Wednesday, 31 January 2018

"இ-வே பில்' பயன்பாட்டில் தளர்வு... சரியான முடிவு! தொழில் துறையினருக்கு நிம்மதி

பத்து கிலோ மீட்டர் சுற்றளவு வரை, "இ-வே பில்' தேவையில்லை என்ற அறிவிப்பு, தொழில் துறையினருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இதனால், மிகப்பெரிய தலை வலி நீங்கியுள்ளதாக கருத்து தெரிவிக்கப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில், அனைத்து மாநில நிதித்துறை அமைச்சர்களை அங்கத்தினராக கொண்டு, ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கவுன்சில், பொருட்களுக்கான வரி விகிதம், வரி மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.ஜி.எஸ்.டி., வரி சட்டப்படி, பொருட்களை ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்துக்கு கொண்டுசெல்லும்போது, அந்த பொருளின் முழு விவரங்கள் அடங்கிய "இ-வே பில்'வைத்திருக்கவேண்டியது அவசியம். பொருட்களில் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால், இ-வே பில் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் கூடிய ஜி.எஸ்.டி., கவுன்சிலில், "இ-வே பில்' பயன்பாட்டிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பத்து கிலோமீட்டர் சுற்றளவு வரை, கொண்டுசெல்லப்படும் சரக்குகளுக்கு, "இ-வே பில்' தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, திருப்பூர் தொழில் துறையினருக்கு மிகவும் உதவிகரமாக அமையும்.நிட்டிங், டையிங், பிளீச்சிங், காம்பாக்டிங், வாஷிங், தையல், எம்ப்ராய்டரி, பிரின்டிங் என, சங்கிலி தொடர் போல் ஏராளமான துறைகளை அங்கமாக கொண்டது, பின்னலாடை தயாரிப்பு துறை. அனைத்துவகை ஜாப் ஒர்க் நிறுவனங்களைக்கடந்தே, ஆடை தயாரிப்பு முழுமை பெறுகிறது.
ஆடை தயாரிப்புக்கு கைகொடுக்கும் ஏராளமான ஜாப் ஒர்க் நிறுவனங்கள், திருப்பூர் மாநகர பகுதியில், பத்து கிலோமீட்டர் தூரத்துக்கு உள்ளாகவே இயங்குகின்றன. எனவே, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு சரக்கு கொண்டுசெல்லும்போது, ஜாப் ஒர்க் துறையினர் "இ-வே பில்' பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை.
ஏற்றுமதியாளர் சங்க பொது செயலாளர் விஜயகுமார் கூறியதாவது: திருப்பூரில், ஆடை தயாரிப்பு சார்ந்த பெரும்பான்மை ஜாப் ஒர்க் நிறுவனங்கள், பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உள்ளாகவே இயங்குகின்றன. ஜி.எஸ்.டி., கவுன்சிலின் புதிய அறிவிப்பு படி, ஜாப் ஒர்க் நிறுவனங்கள், "இ-வே பில்' பயன்பாட்டிலிருந்து விலக்கு பெறுகின்றன. இதனால், ஆவண தயாரிப்பு, பொருட்களை கொண்டுசெல்வதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும். சிறு, குறு நிறுவனங்கள், ஜாப் ஒர்க் துறையினருக்கு இந்த அறிவிப்பு மிகவும் உதவியாக அமையும், என்றார்.



http://www.dinamalar.com/news_detail.asp?id=1828563

No comments:

Post a Comment