Thursday, 3 November 2016

மத்திய நிதி மந்திரி நடத்திய கூட்டத்தில் உடன்பாடு 4 விதமான வரி வசூலிக்க முடிவு சரக்கு, சேவை வரி விகிதம் அறிவிப்பு உணவு தானியங்களுக்கு வரி இல்லை; புகையிலை, குளிர்பானத்துக்கு 28 சதவீத வரி

உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

சரக்கு மற்றும் சேவை வரி

இது தொடர்பான சட்ட மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாநில சட்டசபைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, சரக்கு, சேவை வரியை அடுத்த ஆண்டு (2017) ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இந்த வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டவும் மத்திய அரசு முன்வந்து இருக்கிறது.

கவுன்சில் கூட்டம்

இந்த புதிய வரி விதிப்பை நிர்ணயம் செய்வது மற்றும் அதை அமல்படுத்துவது தொடர்பாக சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலை மத்திய அரசு அமைத்தது.

இந்த கவுன்சிலின் 2 நாள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிப்பது என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உணவு தானியங்களுக்கு வரி இல்லை

சரக்கு மற்றும் சேவை வரி பற்றி கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகைகளாக இருக்கும்.

மக்கள் அதிக அளவில் பயன் படுத்தும் உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படமாட்டாது. சாமானிய மக்கள் பயன்படுத்தும் சுமார் 50 சதவீத பொருட் கள் இந்த வரிவிலக்கு வரம்புக்குள் வந்துவிடும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அவற்றுக்கு வரி விதிப்பது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

குளிர்பானத்துக்கு 28 சதவீத வரி

அடுத்து மக்கள் பொதுவாக பயன்படுத்தும் பொருட்களுக்கு 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படும்.

சில வகை பொருட்களுக்கு 12 சதவீத வரியும், மேலும் சில வகை பொருட்களுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்படும்.

புகையிலை பொருட்கள், ஆடம்பர கார்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிக்கப்படும். அத்துடன் இந்த பொருட்களுக்கு கூடுதல் வரியும் விதிக்கப்படும். இந்த கூடுதல் வரி மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சுத்தமான எரிசக்தி உற்பத்தி மீது விதிக்கப்படும் வரி ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருவாய், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்ட பயன்படுத்தப்படும்.

தற்போது மேற்கண்ட பொருட்களுக்கு உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரியையும் சேர்த்து 30 முதல் 31 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

ரூ.50 ஆயிரம் கோடி

மத்திய, மாநில அரசுகள் தற்போது விதிக்கும் உற்பத்தி வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி போன்றவற்றுக்கு பதிலாக ஒரே வரியாக சரக்கு, சேவை வரி விதிக்கப்படுவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுபட்ட முதல் ஆண்டில் மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இதற்கான நிதியம் ஏற்படுத்தப்படும்.

தங்கத்தின் மீது 4 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்க மத்திய அரசின் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் இறுதி முடிவு எடுப்பது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியதாவது:-

விலைவாசி குறையும்

கவுன்சில் கூட்டத்தில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சரக்கு, சேவை வரி விகிதங்கள் முடிவு செய்யப்பட்டு உள்ளன.

தற்போது 6 சதவீதம் வரி விதிக்கப்படும் பொருட்கள் மீது இனி 5 சதவீதம் வரி விதிக்கப்படும். தற்போது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் சில பொருட்களுக்கு இனி 28 சதவீதம் வரி விதிக்கப்படும். ஆனால் தற்போது 26 சதவீத வரி விதிப்பு விதிக்கப்படும் பல பொருட்களின் மீதான வரி 18 சதவீதமாக குறையும். இந்த வரி விதிப்பு மாற்றத்தால் விலைவாசி குறையும்.

இவ்வாறு அவர் கூறினார். 





http://www.dailythanthi.com/News/India/2016/11/04013141/4-decided-to-charge-different-taxInventory-Service.vpf

No comments:

Post a Comment