Saturday, 5 November 2016

அத்தியாவசிய பொருள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை 4 அடுக்கு ஜிஎஸ்டி வரி அமல்

 ஜிஎஸ்டி வரிகளை 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை நான்கு அடுக்காக விதிக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒருமித்த கருத்துடன் நேற்று இறுதி செய்துள்ளது. இதன்படி, அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை வரிகள் வகைப்படுத்தப்பட உள்ளன.  நாடு முழுவதுக்குமான ஒரே மாதிரியான வரிவிதிப்புக்கு வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தப்பட இருக்கிறது. முன்னதாக நீண்ட இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது. 

 இதன்பிறகு வரி விகிதங்களை நிர்ணயிக்க, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. வேறுபட்ட கருத்துக்களால் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி இருந்து வந்தது. நான்கு அடுக்கு வரி விதிப்பு முறை ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டாலும், இது 6 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை இருந்தது. தற்போது இதில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 சதவீதம் முதல் 28 சதவீதம் வரையிலான நான்கு அடுக்கு வரி விதிப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படிமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் நேற்று கூடியது. இதில் 4 அடுக்கு ஜிஎஸ்டி முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, இதை 5%, 12%, 18%, 28% என வசூலிக்க ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்துள்ளது. இதில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் உணவு தானியங்களுக்கு வரி இல்லை.. அதிக அளவில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஆரம்ப வரியான 5 சதவீதம் விதிக்கப்பட இருக்கிறது.  இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது:
 மக்களால் அதிக அளவில் 

பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும். உணவு பொருட்களுக்கு வரி கிடையாது. அதாவது, நுகர்வோர் விலை குறியீட்டுக்கு உட்பட சுமார் 50% பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. அதிகபட்ச வரியாக 28% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு மேல் வரி விதிக்கப்பட்டு வந்த பொருட்களுக்கான வரி 28 சதவீதமாக இருக்கும். கலால் மற்றும் மதிப்புக்கூட்டு வரியும் சேர்த்து 30% முதல் 31%வசூலித்த பொருட்களுக்கு அதிகபட்ச வரி 28%. பிற பொருட்களுக்கு நிலையான வரியாக 21%, 18% இருக்கும்.

கூடுதல் வரி விதிக்கப்பட்ட பொருட்கள் மூலம் கிடைக்கும் அதிக காரணமாக, அத்தியாவசிய பொருட்களுக்கான வரி 5 சதவீதமாக வைத்திருப்பது சாத்தியமாகிறது. ஆடம்பரமான சொகுசு கார்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரியோடு சேர்த்து, தூய்மை எரிசக்தி கூடுதல் வரியும் விதிக்கப்படுகிறது. இது மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட உதவும்.  

ஜிஎஸ்டி வரி அமலுக்கு வரும் முதல் ஆண்டில் மட்டும், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கு சுமார் ₹50 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. கூடுதல் வரி மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கான இழப்பீட்டை வழங்க லாம். எனவே ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, கூடுதலாக விதிக்கப்படும் செஸ் வரி இருக்காது. இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.


எதிர்பார்ப்பில் விழுந்தது மண்

தீபாவளி பண்டிகை சீசனில் கார்கள் விற்பனை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் சொகுசு கார்கள் விற்பனை மந்தமாகவே இருந்தது. இவற்றுக்கு தற்போது 52 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஜிஎஸ்டி உச்ச பட்ச வரி 26 சதவீதம்தான். எனவே இவற்றின் பெருமளவு குறையும் என்று கருதி, சொகுசு கார் வாங்குவோர் தங்கள் முடிவை ஒத்திப்போட்டிருந்தனர். ஆனால், தற்போது உச்ச பட்ச வரி 28 சதவீதத்துடன் சேர்த்து வித்தியாச வரி விகிதமும் வசூலிக்கப்பட இருக்கிறது.

சேவை வரி வைத்த வேட்டு

மத்திய அரசு கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, 12.36 சதவீதமாக இருந்த சேவை வரி யை 14 சதவீதமாக உயர்த்தியது. பின்னர் தூய்மை இந்தியா திட்டத்துக்காக அரை சதவீத வரியும், கிரிஷ் கல்யாண் என்படும் வேளாண் மேம்பாட்டு திட்டங்களுக்காக அரை சதவீத வரியும் விதித்து, சேவை வரியை 15 சதவீதமாக உயர்த்திவிட்டது. தற்போது ஜிஎஸ்டியில் இந்த வரி விதிப்பு 18 சதவீதமாகி விட்டது. இதனால் போன் பில், ஓட்டல் கட்டணம் முதல் கிரெடிட் கார்டு வரை சேவைவரி பட்டியலில் உள்ள அனைத்துக்கும் கட்டணங்கள் அதிகரிக்கும்.

விலை அதிகரிக்கும் பொருட்கள்

சமையல் பொருட்கள்

ரீபைண்ட் ஆயில், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய் தனியா, கருப்பு மிளகு ஆகியவற்றுக்கு தற்போது 5 சதவீதமாக உள்ளது இதனால் இவற்றுக்கு பாதிப்பு இருக்காது. அதேநேரத்தில், மஞ்சள், ஜீரகம் ஆகியவற்றுக்கு தற்போது 3 சதவீத வரி உள்ளது. இதனால் இவற்றின் விலை உயரலாம்.

டிவி, பிரிட்ஜ்

டிவி, பிரிட்ஜ், ஏர்கண்டிஷனர், வாசிங்மிஷின், இன்வெர்டர், மின்விசிறி, சமைலறைக்கான மின்சார சாதனங்கள் போன்ற பலவும் தற்போது 29 சதவீதம் முதல் சுமார் 31 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. இதனால் குறையும் என்றாலும், பெரிய அளவில் பலன் கிடைக்காது.

ஷாம்பு, ஹேர் ஆயில்

ஷாம்பு, ஷேவிங் கிரீம், முக பவுடர், ஹேர் ஆயில், ஷாம்பு, சோப்ப போன்றவை தற்போது 29 சதவீத வரிவிதிப்பில் வருகின்றன. இதனால் இவற்றின் விலை குறையும்.

கொசுவர்த்தி உயரும்

காஸ் அடுப் பு, காஸ் பர்னர், கொசு விரட்டி மற்றும் பூச்சி ஒழிப்பு மருநஅதுகள் ஆகியவை தற்போது 25 சதவீத வரி விதிப்புக்குள் உள்ளன. இவற்றின் விலை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனினும், இவை எந்த வரிவிதிப்புக்குள் வரும் என்று இன்னும் பட்டியலிடப்படவில்லை.

பட்டியல்தான் இறுதி செய்யும்
    
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை முடிவு செய்யப்பட்டாலும், எந்தெந்த பொருட்கள் எந்த வரி விகிதத்துக்குள் வரும் என்று இறுதி செய்யப்படவில்லை. வரி விகிதங்கள் அந்தந்த துறை வாரியாக முடிவு செய்யப்பட்டு பட்டியலிடப்பட்டால்தான் ஜிஎஸ்டி வரியின் சாதக, பாதகங்கள் முழுமையாக தெரியவரும்.

* ஜிஎஸ்டி வரி 5,12,18,28% என 4 விதமாக விதிக்கப்படும்.  இதற்கு முன்பு இந்த வரி விதிப்பு 6%, 12%, 18%, 26% என விதிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

* அதிகபட்ச வரியான 28 சதவீதம், ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்படும். இருப்பினும், தற்போது உள்ள வரி விதிப்புக்கு ஏற்ப வித்தியாசத்தொகை செஸ் வரியாக கூடுதலாக வசூலிக்கப்படும். இதனால், ஜிஎஸ்டி உச்ச பட்ச வரி குறைவாக இருந்தாலும் இவற்றின் விலை சரிவதற்கான வாய்ப்பு இல்லை.

* சேவை வரி தற்போது 15% உள்ளது. இது இனி 18 சதவீதமாக அதிகரிக்கும்.

* ஜிஎஸ்டி கவுன்சிலால் இறுதி செய்யப்பட்ட வரி விகிதங்கள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும்.

* எந்தெந்த பொருட்கள் எந்த வரிவிதிப்புக்குள் அடங்கும் என்று அதிகாரிகள் பட்டியலிட்ட பிறகு, அதை ஜிஎஸ்டி கவுன்சில் ஆராய்ந்து ஒப்புதல் வழங்கும்.




http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=256367

No comments:

Post a Comment