Thursday, 3 November 2016

4 அடுக்கு முறையில் சரக்கு மற்றும் சேவை வரியை நிர்ணயிக்க முடிவு

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு சட்டத்தின் கீழ் 4 அடுக்கு முறையில் வரி விதிப்பு செய்ய ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் இறைச்சி மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என்றும் டி.வி., ஏ.சி. போன்ற மின்சாதனங்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி மசோதா சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விகிதம், இழப்பீடு கொள்கை உள்ளிட்ட அம்சங்களை முடிவு செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், 4 அடுக்கு வரி விகிதம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி, குறைந்தபட்ச வரி விகிதமாக 6 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நிலையான வரி விகிதமாக 12 மற்றும் 18 சதவீதம், அதிகபட்சமாக 26 சதவீதம் என 4 அடுக்கு வரி விகிதங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இந்த புதிய வரிவிகிதப்படி, கோழி இறைச்சி, தேங்காய் எண்ணெய் போன்ற தற்போது 4 சதவீத வரி விதிப்பு பொருட்கள், 6 சதவீத ஜி.எஸ்.டி. வரி விகிதப்பட்டியலில் சேர்க்கப்படுவதால் இவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

மேலும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் விலையும் உயர வாய்ப்புள்ளது. இதேபோல மற்ற சமையலறை பொருட்களான மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, கருமிளகு, எண்ணெய் வித்துகள் போன்றவற்றின் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

அதே நேரம், தற்போது 29 சதவீத வரி விதிப்பில் உள்ள தொலைக்காட்சிப்பெட்டி,  குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், இன்வெர்ட்டர், மின்விசிறி மற்றும் சமையல் சாதனங்களுக்கு இனிமேல் 26 சதவீத ஜி.எஸ்.டி. வரியே விதிக்கப்படும் என்பதால் அவற்றின் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.




http://ns7.tv/ta/4-layer-determine-goods-and-services-tax.html

No comments:

Post a Comment